முதல்வராக முடியாமல் தவிக்கும் விஜய்.. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியில் புதிய தேர்தல் தேவை - ஸ்ரீதர் வேம்பு
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நிலவும் தொங்கு சட்டமன்ற சூழல், கவர்னர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காதது போன்றவற்றை கருத்தில் கொண்டு, சோஹோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு ஒரு முக்கிய கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
"எந்தக் கட்சிக்கும் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. இப்படி உருவாகும் எந்த அரசும் இழுபறிகளாலும் அழுத்தங்களாலும் நிலையற்றதாகவே இருக்கும்" என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் இப்படிப்பட்ட நிலையற்ற அரசுக்கு தகுதியானது அல்ல என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சியும் புதிய தேர்தலும்
மேலும் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என்று தெளிவாகக் கூறியுள்ளார். "இம்முறை ஓட்டுக்குப் பணம் இல்லை என்ற மிகக் கடுமையான நடவடிக்கை இருக்க வேண்டும். அப்போது யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு உள்ளது என்பதை நாம் பார்க்கலாம்" என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் எந்தக் கட்சியும் தனியாக பெரும்பான்மையை பெறாத நிலையில், மக்களின் உண்மையான தீர்ப்பை மீண்டும் பெறுவதற்கு புதிய தேர்தல் அவசியம் என ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார். மீண்டும் தேர்தல் வந்தால் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் மீண்டும் ஆட்சியை பெரும்பான்மை உடன் பிடிப்பார் எனவும் ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தல் வந்தால் "விஜய் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார். திமுக மற்றும் அதிமுக இணைந்து விஜயை தடுக்க விரும்பினால் அவர்கள் ஒன்றாகப் போராடட்டும் என்றும், பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
"பாஜக ஒரு இடத்தை கூட பெறாவிட்டாலும் பரவாயில்லை. தமிழகத்தில் பாஜக ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை "மக்கள் தீர்மானிக்கட்டும்" என்று ஸ்ரீதர் வேம்பு தனது பதிவை முடித்துள்ளார்.
தற்போதைய தொங்கு சட்டமன்ற நிலையில் எந்த அரசும் நீண்டகாலம் நிலைத்து நிற்காது என்பதால், மக்களின் உண்மையான விருப்பத்தை அறிய புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்பதுதான் தற்போதைய பில்லியன் டாலர் கேள்வி.
விஜய் - கவர்னர் உடனான நேற்றைய சந்திப்பை தொடர்ந்து இன்றும் சந்தித்து காங்கிரஸ் ஆதரவும், 112 இடங்களில் குறித்த விபரத்தையும் விளக்கி, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் விஜய் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என தமிழக ஆளுநர் பொறுப்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேள்விக்கு தவெக தலைவர் விஜய் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தற்போதைக்கு விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.
இதனால் விஜய் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டது போல் தெரிகிறது. ஆளுநரிடமிருந்து சாதகமான பதில் எதுவும் இல்லை என்பதால் தவெக தலைவர் விஜய் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது தனது இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.















Click it and Unblock the Notifications