கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
கோவை: கோவையில் தொழிலதிபருக்கு சொந்தமான ரூ 300 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் , பணத்தையும் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர், சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த மோசடியை அறிந்த சிவராஜ், அதிர்ச்சி அடைந்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மோசடிக்கு உடந்தையாக இருந்த வசந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான அஸ்வின்குமார் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ரூ 300 மதிப்பிலான சொத்து, பணத்தை மோசடி செய்து அபகரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள அஸ்வின்குமார் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் அந்த இருவரும் ஷீலா உள்ளிட்ட மூவருடன் தொடர்பில் இருந்துள்ளனரா என்பதை அறிய அவர்களுடைய செல்போன்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications