ஈஷாவில் சிவராத்திரி! கோவை வரும் குடியரசுத் தலைவர்! பாதுகாப்பு பணியில் 6000 போலீஸ் குவிப்பு
கோவை வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்காக 6,000 போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கோவை: ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக 6,000 போலீசார் கோவை மாநகரம் மற்றும் புறநகரில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் அமைந்து இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு இதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு விரைவில் நடைபெறும் சிவராத்திரியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

ஈஷா சிவராத்திரி விழா
கடந்த ஆண்டு இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு முதல் முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார். குறிப்பாக பிப்ரவரி 18 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற இருக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள உல்ளார்.

தமிழ்நாடு வரும் திரௌபதி முர்மு
சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை விடிய விடிய நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் திரௌபதி முர்மு, அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் கோவை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

தலைமை செயலாளர் ஆலோசனை
குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கடந்த 11 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகவும், துறைகளின் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சைலேந்திர பாபு ஆலோசனை
அந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திர மோகன், பொதுத் துறை அரசு செயலாளர் முனைவர் ஜகந்நாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன், பொதுத் துறை அரசு துணை செயலாளர் அனு ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
குடியரசுத் தலைவருக்கு வழங்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெடிகுண்டை செயலிழக்கும் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் இந்த விழாவில் பங்கேற்கும் மாநில ஆளுநர், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்கை வசதி ஏற்பாடு செய்து தர அறிவுறுத்த வேண்டும்.

சிறப்பு ஏற்பாடுகள்
அத்துடன் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்ட மருத்துவக் குழுவை ஏற்படுத்த வேண்டும் எனவும், மின்சார விநியோகத்தில் எந்த தடையும் இருக்கக்கூடாது எனவும், தயார் நிலையில் ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும் எனவும் சீராக சாலைகள் இருக்க வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

6,000 போலீசார்
தமிழ்நாட்டுக்கு குடியரசுத் தலைவர் வருவதை முன்னிட்டு கோவையில் தற்போதே கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்து இருக்கின்றனர். மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கோவை மாநகரில் 1,000 போலீசாரும் புறநகர் பகுதிகளில் 5000 போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications