துடியலூர் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா.. 40 பேருக்கு பரிசோதனை
துடியலூர்: கோவை மாவட்டம் துடியலூரில் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்படுவதை அடுத்து அந்த குறிப்பிட்ட அமைப்பிடம் உணவு வாங்கிய போலீஸார் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏற்கெனவே அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் நாட்டு மக்களுக்கு அளித்த தனது உரையில் ஊரடங்கை வரும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், கட்டடத் தொழில்கள், வீட்டு வேலை செய்யும் தொழில் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன. இதனால் அன்றாட கூலி பெற்று பிழைக்கும் ஏழை மக்கள் உணவின்றி அவதியடைந்து வருகிறார்கள். சிறு குறு தொழிலாளர்கள் தாங்கள் விற்பனையின் மூலம் பிழைப்பு நடத்தி வந்தனர்.

நிதியுதவி
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிதியுதவியையும் ரேஷன் பொருட்களையும் அறிவித்தாலும் அவை போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். இதனால் ஏழை மக்களுக்கு தன்னார்வல அமைப்புகள் உணவு வழங்கி வருகிறார்கள். அதே போல் ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க கொளுத்தும் வெயிலில் போலீஸாரும், தெருக்களை சுத்தப்படுத்தவும் குப்பைகளை சேகரிக்கவும் தூய்மை பணியாளர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள்.

சீரமைக்கும் பணிகள்
நமக்காக போராடும் இந்த ஹீரோக்களும் உணவு கிடைக்கும் வகையிலும் போலீஸாருக்கும் தன்னார்வல அமைப்புகள் உணவு வழங்குகிறார்கள். அந்த வகையில் கோவை வடமதுரை கோத்தாரி லே அவுட் பகுதிகளை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். இவர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளையும் செய்து வந்தார்.

40 பேருக்கும்
இந்த நிலையில் அவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு அளித்து வந்துள்ளார். இவர் உணவு அளித்த காவல் நிலையத்தில் உள்ள 40 பேருக்கும் இன்று காலை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சோதனை
கடந்த மார்ச் 23-ஆம் தேதி டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ள 61 வயது முதியவருக்கு இரு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் என வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. இதையடுத்து துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துடியலூர் காவல் துறையினருக்கு சோதனை நடத்தப்படுகிறது. அது போல் தன்னார்வலர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. இதனிடையே இவர் துடியலூர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications