8 வருடங்களில் முதல்முறை.. கோவை தூய்மை பணியாளர்கள் தகர கொட்டகையில் அதிகாரிகள் ஆய்வு
கோவை: கோவையில் தூய்மை பணியாளர்கள் 8 வருடங்களுக்கு மேலாக தகர கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டனர். அகதிகளை விட மோசமான நிலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதை நம் இணையதளத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தோம். அதன் எதிரொலியாக 8 வருடங்களில் முதன்முறையாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தனர்.
கோவை உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணிக்காக, சிஎம்சி காலனியில் இருந்து தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு இடிக்கப்பட்டது. அவர்களுக்கு புல்லுக்காடு பகுதியில் தகர கொட்டகையில் தற்காலிகமாக வீடு ஒதுக்கப்பட்டது. ஒன்றரை வருடத்தில், அதாவது 18 மாதங்களில் புதிய கட்டி தரப்படும் என்று அரசு வாக்குறுதியளித்தது. அதிமுக ஆட்சி முடிந்து, திமுக ஆட்சியும் முடிந்து இப்போது தவெக ஆட்சி நடைபெறுகிறது.

அதிகாரிகள் ஆய்வு
8 வருடங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு வீடு கொடுக்கவில்லை. குடிநீர், சுகாதாரம் போன்ற எந்த அத்தியாவசிய வசதியும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து ஒன் இந்தியா இணையதளத்தில் அகதிகளை விட மோசமான நிலை என்கிற தலைப்பில் மக்களின் வேதனைகளை விரிவாக பதிவு செய்திருந்தோம். அதனை தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகள் தூய்மை பணியாளர்களின் தகர கொட்டகையில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது தூய்மை பணியாளர்கள், கடந்த 8 ஆண்டுகளில் அதிகாரிகள் வருவது இதுதான் முதல்முறை. நீங்கள் வருவதற்காக அவசர அவசரமாக எங்கள் பகுதியை சுத்தம் செய்தனர். அதனை தினமும் செய்யுங்கள் என்று தான் கேட்கிறோம். எங்களுக்கு விரைவில் மாற்று வீடு வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த பகுதியில் இல்லை. காவல்துறை மூலம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். காலியாக உள்ள வீடுகளில் சமூக விரோதிகளை நடமாட்டம் உள்ளது. அதை தடுக்க வேண்டும். குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், "கடந்த 6 மாதங்களாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஒரு வருடத்திற்குள் பணி முடிந்து, வீடுகள் ஒப்படைக்கப்படும். காலியாக உள்ள வீடுகளில் தகர கொட்டை அகற்றப்படும். அந்த வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். மின் தடை இருக்காது. காவல்துறை மூலம் தினசரி கண்காணிப்பு பணி நடக்கும். பாதுகாப்பு பலப்படுத்தப்படும். வீடுகளில் குப்பை தினசரி சேகரிக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும்" என்று கூறியுள்ளனர். தங்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
