மாணவர் விடுதியில் மாட்டுக்கறி தருவோம் என்ற வன்னியரசு எங்கே? அகிலன் தற்கொலையில் பெருத்த மௌனம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்திருக்கும் துயரச் சம்பவம், கோவையைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலனின் தற்கொலை. அரசு உதவிபெறும் பள்ளியில் வகுப்பறைக்குள்ளேயே மாட்டுக்கறி உண்பவர்கள் யார் என்று ஆசிரியர் கேட்டதும், அதைத் தொடர்ந்து சக மாணவர்களால் அகிலன் சாதி ரீதியாகவும் உணவு ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதும் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதற்கு முன் "மாணவர் விடுதிகளிலேயே மாட்டுக்கறி வழங்குவோம்" என்று முழங்கிய சமூக நீதி அமைச்சர் வன்னியரசுவின் தொடர் மௌனம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Akilan Death Case

வகுப்பறையில் தொடங்கிய சர்ச்சை: என்ன நடந்தது கோவையில்?

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அகிலன். இவருடைய வகுப்பறைக்குள் ஆசிரியர் விஜயகுமார் என்பவர் மாணவர்களிடம், "யாரெல்லாம் வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்?" என்று கேட்டு மாணவர்களைத் தனிமைப்படுத்தியதாக அகிலனின் பெற்றோர் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதன் பிறகு, சக மாணவர்கள் சிலர் அகிலனை நோக்கி சாதிய இழிச்சொற்களைப் பேசியும், மாட்டிறைச்சி உண்பதை சுட்டிக்காட்டியும் தொடர்ந்து கேலி செய்துள்ளனர். இந்த மன உளைச்சல் தாங்காமல் மாணவன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். புகாரின் பேரில் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

விடுதியில் மாட்டுக்கறி: மேடை முழக்கமும் அமைச்சர் பதவியும்

சில வாரங்களுக்கு முன்பு வரை, தமிழக அரசின் சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள வன்னியரசு பொதுவெளியிலும் அரசு மேடைகளிலும் மிக ஆக்ரோஷமாகப் பேசி வந்தார். சென்னை சைதாப்பேட்டை விடுதியில் ஆய்வு நடத்திய போது, "மாணவர் விடுதிகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வழங்கப்படுவது போல மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மாட்டிறைச்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வெளிப்படையாக அறிவித்தார்.

உணவு உரிமை என்பது ஒருவரின் அடிப்படை உரிமை, அதில் சாதியப் பாகுபாடு இருக்கக் கூடாது என்ற நோக்கில் அப்போது அவர் பேசிய கருத்துகள் பரவலான விவாதத்தை ஏற்படுத்தின. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே தன்னை முன்னிறுத்திக் கொண்ட வன்னியரசு, சமூக நீதி விடுதிகளின் பொறுப்பாளராக இருக்கும் நிலையில், அவரது கருத்துகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

அகிலன் மரணமும் அமைச்சரின் அதிர வைக்கும் மௌனமும்

ஆனால், தற்போது அதே மாட்டிறைச்சிப் பழக்கத்தை வகுப்பறையில் அடையாளப்படுத்தி ஒரு மாணவன் மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு உயிரிழந்திருக்கும் இந்த சூழலில், துறை அமைச்சர் வன்னியரசு இதுவரை ஒரு கண்டனக் குரல் கூட பதிவு செய்யாமல் வாய்மூடி இருப்பது பலரையும் திகைக்க வைத்துள்ளது.

மாட்டிறைச்சியை மாணவர் விடுதிக்கே கொண்டு வருவோம் என்று துணிச்சலாகப் பேசியவர், மாட்டிறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒரு பள்ளியில் மாணவன் பலியாகும்போது எங்கே போனார்? அரசுப் பள்ளிகளிலும் உதவிபெறும் பள்ளிகளிலும் உணவுப் பழக்கத்தை வைத்து பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க சமூக நீதித் துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவோ அல்லது துறை ரீதியாகப் பள்ளிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கவோ ஏன் இன்னும் அவர் முன்வரவில்லை?

என்ற நியாயமான கேள்விகள் எளிய மக்களிடமிருந்தே எழத் தொடங்கியுள்ளன.

தவெக ஆட்சியில் பல்லிளிக்கும் சமூக நீதி

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கு வந்ததும், சமூக நீதியைத் தனது முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாக அறிவித்தது. தங்களின் காங்கிரஸ் கூட்டணிக்கு சமூக நீதி என்றெல்லாம் பெயர் வைத்து காமெடி செய்தது..

ஆனால், கொள்கை அளவில் பேசப்படும் "சமூக நீதி" என்பது வெறும் வெற்று மேடைப் பேச்சாக மட்டுமே இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போதைய சூழ்நிலையில் வலுத்துள்ளது. அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்குள் ஆசிரியர்களே சாதிய அடையாளங்களை, உணவு முறைகளை மாணவர்களிடையே பிரித்துப் பார்க்கும் நிலையை இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பது அகிலன் சம்பவம் மூலம் தெளிவாகியுள்ளது.

அமைச்சரவையில் சமூக நீதித் துறையை அலங்கரிக்கும் தலைவர்கள், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதிகார மௌனம் காப்பது பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம் என சமூக தளங்களில் விமர்சனங்கள் வலுக்கின்றன.

மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

உணவு என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை மற்றும் விருப்பம். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே "நீ என்ன சாப்பிடுகிறாய்? உனது சாதி என்ன?" என்ற நஞ்சை விதைக்கும் எந்தவொரு நபரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில், வெறும் வார்த்தைகளில் மட்டும் சமூக நீதியைப் பேசிவிட்டு, களத்தில் அநீதி நடக்கும் போது ஒதுங்கிக் கொள்ளும் அரசியல் தலைவர்களின் போலித்தனம் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அகிலனின் குடும்பத்திற்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவதோடு, பள்ளிகளில் இத்தகைய பாகுபாடுகள் மீண்டும் நிகழாத வண்ணம் தவெக அரசும், அமைச்சர் வன்னியரசுவும் உடனடியாக மௌனம் கலைத்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் தற்போதைய ஒற்றைக் கோரிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+