இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கு - பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவர் கைது
தமிழகத்தின் கோவையில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவின் இரண்டு கூட்டாளிகளை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர்.
கோவை: இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளிகளை தமிழக காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்து உள்ளனர். இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா, பெங்களூருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் பெருந்துறை சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கையில் போதைப் பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் தலைமறைவாக இருந்தார் லொக்கா.
கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில் காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்திருந்தார். கடந்த ஆண்டு ஜூலையில் உயிரிழந்தார். அங்கொட லொக்கா விஷம் வைத்து கொல்லப்பட்டு மதுரையில் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து கைது
கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ்கள் கொடுத்து அவரது சடலம் பெறப்பட்டு மதுரையில் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பீ ளமேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி., வசம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, லொக்காவினுடைய சடலத்தை எரிக்க உதவியாக இருந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் வைக்கப்பட்டார்.

என்கவுண்டர்
அங்கொட லொக்காவின் கூட்டாளிகளை இலங்கை அரசு அடுத்தடுத்து வேட்டையாடி வருகிறது. ஏற்கனவே அங்கொட லொக்காவின் கூட்டாளி அசித்த ஹேமதிலக்கவை கடந்த ஆண்டு இலங்கை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சமிந்தா என்ற மற்றொரு கூட்டாளியையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் என்கவுண்ட்டரில் இலங்கை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இலங்கையைவிட்டு தப்ப முயன்ற 4 லொக்காவின் கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

2 கூட்டாளிகள் கைது
இந்நிலையில் அங்கொட லொக்கா, இந்தியாவில் வசிக்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை , கோவை சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் பெங்களூரு சென்று குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா, பெங்களூருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

கோவையில் ஆஜர்
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றிரவு கோவைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், சி.ஜே.எம். நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் தொடர்ந்து பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications