‘பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது?’ அண்ணாமலை கண்டனம்
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவைக்கு புறப்பட்டு சென்றார். கோவைக்கு இன்று காலை சென்ற ஸ்டாலின், கோவை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. இதன்படி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடி விற்பனை செய்யப்படும். தென்னை நோய் பாதிப்புகளை களைய ரூ.14 கோடி நிதி வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். ஆர்.எஸ் புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும். உக்கடத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் உள்பட 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது?
மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை விளம்பர விரும்பி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications