பின்தங்கிய திமுக.. கோவை மேயர் வார்டில் அண்ணாமலைக்கு அதிக ஓட்டு! 492 பூத்களில் சூரியனை முந்திய தாமரை
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் திமுகவை விட 492 பூத்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிக ஓட்டுகள் வாங்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி கோவை திமுக மாநகராட்சி திமுக மேயர் கல்பனா வார்டில் உதயசூரியனை விட ‛தாமரை' சின்னத்துக்கு அதிக ஓட்டு விழுந்துள்ளது. இதுபற்றி முழுவிபரம் வருமாறு:
கடந்த 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என 40 இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.

கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என பாஜகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அங்கும் அவர் தோல்வியடைந்தார். அண்ணாமலையை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வீழ்த்தினார்.
அதாவது கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 200 ஓட்டுகள் பெற்றார். அண்ணாமலை 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். இங்கு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் 3ம் இடம் பிடித்தார். அவர் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 490 ஓட்டுகள் வாங்கினார்.
இந்நிலையில் தான் ஒவ்வொரு நாளும் கோவை லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் குறித்த புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை விட பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ள தகவல்கள் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கோவை லோக்சபா தொகுதியில் மொத்தம் 2,048 பூத்கள் உள்ளன. இதில் 492 பூத்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை விட அதிக ஓட்டு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அதோடு கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் வார்டு 19ல் அண்ணாமலைக்கே அதிக வாக்கு கிடைத்துள்ளது. அந்த வார்டில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 3,655 ஓட்டுகள் பெற்ற நிலையில் அண்ணாமலைக்கு 3,985 ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதாவது திமுக மேயர் கல்பனாவின் வார்டில் திமுகவை விட பாஜகவுக்கு 330 ஓட்டுகள் அதிகமாக கிடைத்துள்ளது.
மேலும் அண்ணாமலைக்கு கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கிராமப்புற சட்டசபை தொகுதிகளை விட நகர்புற சட்டசபை தொகுதிகளில் அதிக ஓட்டு கிடைத்துள்ளது. அதன்படி அண்ணாமலைக்கு அதிகபட்சமாக கோவை வடக்கு சட்டசபை தொகுதியில் 71,174 ஓட்டுகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 66,472 ஓட்டுகளும், கோவை தெற்கு தொகுதியில் 53,579 ஓட்டுகளும் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications