ஹலோ சொல்லாதீங்க.. இனி “தாமரை வணக்கம்” சொல்லுங்க.. கோவையில் வேண்டுகோள் வைத்த அண்ணாமலை!
கோவை: "இனி வரும் 7 நாட்களுக்கு மொபைல் போனில் ஹலோ சொல்லாமல், "தாமரை வணக்கம்" என சொல்ல வேண்டும்" என பாஜகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தொகுதியில் அனைவராலும் உற்று நோக்கப்படும் தொகுதி கோவை. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அண்ணாமலை தீவிர பிரச்சாரம்: கோவையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என அனைத்து பிரதான கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக வேட்பாளர் அண்ணாமலை, காலை முதல் இரவு வரை தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று (ஏப்ரல் 11) இரவு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தாமரை வணக்கம் சொல்லுங்க: அப்போது மக்கள் மத்தியில் பேசிய பாஜக மாநில தலைவரும் கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, "தமிழக அரசியல் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கோவை இருக்க வேண்டும். திமுகவினர் மொத்த சொத்தையும் எடுத்து வந்தாலும் கோவை மக்கள் நேர்மையின் பக்கம் நிற்பார்கள்.
அடுத்த 7 நாட்களுக்கு நம் தொலைபேசிக்கு அழைப்பு வந்தால் அலைபேசியை எடுத்து ஹலோ சொல்வதற்கு பதிலாக தாமரை வணக்கம் எனச் சொல்லுங்கள். ஹலோ என ஆங்கில வார்த்தை வேண்டாம். தொலைபேசியில் பேசும்போது தாமரை வணக்கம் எனச் சொல்லும்போது, தாமரை சின்னம் அனைவருக்கும் போய்ச் சேரும். கோவையில் தாமரையை மலர வைப்போம் " என பாஜக தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெறும் 21 சீட்: மேலும் பேசிய அண்ணாமலை, "திமுக காங்கிரஸ் இந்தியா கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் என்று யாருமே இல்லை. வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக, நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? இத்தனை ஆண்டுகளாக ஏன் எதுவும் செய்யவில்லை? இன்னொரு பக்கம், அதிமுக, தாங்கள் தேர்தலில் ஜெயித்தால் கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்த பாராளுமன்ற உறுப்பினர் எதற்கு? மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.
பாரதப் பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால நல்லாட்சியில், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலக அரங்கில், வலிமையான நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த பத்து ஆண்டு காலமாக, நமது பிரதமர் அவர்களைப் பயன்படுத்தி, நமது கோவையை முன்னேற்ற, இதற்கு முன்பிருந்த கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். அதை நாம் இந்தத் தேர்தலில் சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் உருவாகும். வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கு, இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். கோவையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற, தாமரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
100 நாளில்: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை மிகவும் அதிகரித்து விட்டது. நமது பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தைக் காக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை, இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். ஜூன் 4 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 100 நாட்களில், கோவையில் போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் அலுவலகம் அமைக்கப்படும். கடந்த இருபது ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயம் தீர்க்கப்படும்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்தி, நமது கோவை வளர்ச்சி பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications