அனைவருக்கும் தொழில் வாய்ப்பு.. டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டருக்குள்.. அமைச்சர் சொன்ன விஷயம்
கோவை: டாஸ்மாக் பார்கள் சில நபர்களின் கட்டுப்பாட்டிலும் ஏகபோக உரிமையிலும் இருந்து வந்தன. இந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டருக்குள் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத பகுதிகளில் பார்கள் அமைத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்தார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டம் நடக்கும். அதில், கடந்த மாதங்களில் என்னென்ன தவறுகள் செய்துள்ளோம், என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன, இனி என்னென்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து ஆலோசனை செய்தோம்.

பாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் பெறுவது 80 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டதாக டாஸ்மாக் சங்கங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 20 சதவீதம் இடங்களில் எங்கு கூடுதலாகப் பணம் பெறுகிறார்கள் என்ற தகவலைத் தந்தால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பணத்தை எப்படி யாரும் எடுக்கக் கூடாது என நினைக்கிறோமோ, அதேபோல நுகர்வோரின் பணத்தையும் யாரும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். கூடுதலாகப் பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை இடமாற்றம் செய்யக் கூறியுள்ளோம். கடைகளின் பரப்பளவு பெரிதாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்; டாஸ்மாக் கடை 500 சதுர அடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்.
இடமாற்றம் செய்யப்படக்கூடிய டாஸ்மாக் கடைகள் அனைத்துமே குறைந்தபட்சம் 400 முதல் 500 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட இடங்களில்தான் அமைக்கப்படும். இதற்கு முன்பு டாஸ்மாக் பார்கள் சில நபர்களின் கட்டுப்பாட்டிலும் ஏகபோக உரிமையிலும் இருந்து வந்தன. இந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டருக்குள் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத பகுதிகளில் பார்கள் அமைத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யச் சொன்னதே திமுக அரசுதான். ஐந்து ரூபாய் வாங்கியவர்களைப் பத்து ரூபாய் வாங்கக் கூறியதே திமுக அரசுதான். சட்டமன்றத்திலேயே இது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் MRP மீறலுக்காகப் போலித்தனமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து MRP மீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் MRP மீறல்கள் நடந்தால், அதற்குக் கடை ஊழியர்கள் மட்டுமன்றி மாவட்ட மேலாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
என் பெயரையோ அல்லது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கடைகளில் முறைகேடான வசூலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் என் பெயரைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் கட்சியினரா அல்லது தெரிந்தவர்களா என்று பார்க்கப்பட மாட்டாது. 'தவறு என்றால் தவறுதான்' என நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியதைப் போலக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசு அமைந்த பிறகு பல மாவட்ட மேலாளர்களும், மூத்த மண்டல மேலாளர்களும் மாற்றப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தியில் 11 மதுபான ஆலைகளும் 5 முதல் 6 Brewing ஆலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. கடந்த கால ஆட்சியாளர்களைப் போலக் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உரிமம் பெற்ற அனைத்து 11 ஆலைகளிடமிருந்தும் சமமான முறையில் கொள்முதல் செய்வதுதான் அரசின் திட்டமாகும். இதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் சுட்டிக்காட்டிய 'கரூர் கேங்' மற்றும் Organised Crime Syndicate குறித்து அமலாக்கத்துறை சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முதலமைச்சர் விரிவாகப் படித்தறிந்துள்ளார். வெறும் பேச்சளவோடு நிறுத்திவிடாமல், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காகத் தேவையான சாட்சிகளும் ஆதாரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன. விரைவில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தவறுகள் எங்கு நடந்தாலும், அவை குறித்துத் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எப்பேர்ப்பட்ட உயர் அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications
