கோவை கார் வெடிப்பு சம்பவம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்ட கேள்வி.. அண்ணாமலை பதிலடி!
சென்னை: என்ஐஏ அமைப்பு அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து அக்.31ல் பாஜக பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே கோவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கார் உரிமையாளர், உயிரிழந்தவர் பெயர் உள்ளிட்டவை விசாரணையில் கண்டறியப்பட்டது. 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி பேட்டி
ஆனால் ஏதோ பதற்றம் நிலவுவது போல சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையில் தான் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. யாரும் சொல்லி விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை.

என்ஐஏ விசாரணை
ராணுவ வீரர் உயிரிழப்பையே அரசியலாக்க முயற்சித்த நபர் தான், கோவை கார் வெடிப்பு சம்பவத்தையும் அரசியலாக்குகிறார். தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். காவல் துறையினர் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து கைது செய்வார்கள். மேலும், காவல் துறையினர் விசாரணை அறிக்கை வெளியிடும் முன்பே, விசாரணை தொடர்பான தகவல்களை அண்ணாமலை வெளியிடுகிறார் என்றால் அவரிடம் தாம் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்.

அண்ணாமலை பற்றி செந்தில் பாலாஜி
ஒரு சிலர் அரசியல் உள் நோக்கத்துடன் சொல்வதை மக்களிடம் கொண்டு போனால் பதற்றம் ஏற்படக்கூடும். எதை திண்ணால் பித்தம் தெளியும் என திரிகிறார்கள். முப்படை தளபதி இறப்பின் போது அக்கட்சியினர் சென்று அஞ்சலி செலுத்தினார்களா? விபத்து குறித்து விசாரிக்க சொன்னார்களா? உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூர் சந்தைக்கு போச்சு என்பார்கள். அப்படிதான் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அண்ணாமலைக்கு அடிப்படை அரசியலில் பக்குவம் இல்லை, புரிதலும் இல்லை. அவர் அரசுக்கு அவப்பெயர் கிடைக்காதா என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் என்று விமர்சித்தார்.

அண்ணாமலை பதில்
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்து குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அரசின் அமைச்சர் செந்தில் பாலாஜி "அரசுக்குத் தெரியாதது அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களும் அரசு இயந்திரமும் எதை நோக்கி நகர்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. அரசின் இயலாமையை வெளிப்படுத்தும் அமைச்சர் சொல்வதை ஏற்றுக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதவி விலகுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications