கோவையில் ஷாக்.. பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்.. சென்னையை சேர்ந்த 30 பேர் படுகாயம் - சிறுமி பலி
கோவை: கோவையில் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி பலியான நிலையில் 31 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
சென்னையை சேர்ந்தவர்கள் மொத்தமாக இணைந்து நீலகிரிக்கு சுற்றுலா சென்றனர். சென்னை வியாசர்பாடி, பெரம்பூர் மற்றும் அதனை சுற்றி வசிப்பவர்கள் சேர்ந்து இந்த சுற்றுலா சென்றனர். 16 பெரியவர்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 31 பேர் சுற்றுலா சென்றனர்.

இவர்கள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கடந்த 30ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டனர். கடந்த 1ம் தேதி மேட்டுப்பாளையம் சென்றனர். அதன்பிறகு அவர்கள் அங்கு முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பேருந்தில் உதகை சென்றனர். ஊட்டி மற்றும் அதனை சுற்றிய இடங்களை பார்த்து ரசித்தனர்.
அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து இன்று காலை சுற்றுலா பேருந்தில் மேட்டுப்பாளையம் திரும்பி கொண்டிருந்தனர். இந்த பேருந்து கோத்தகரி - மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தது. பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது சுற்றுலா பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து டிரைவர் உள்பட 32 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன் போலீசார், ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை அவர்கள் ஆம்புலன்ஸில் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு 6 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தவர். அவரது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் மற்ற 31 பேரும் மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 30 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications