நோட்டாவை விட குறைவான வாக்கு வாங்கிய சேலஞ்சர் துரைசாமியை.. ஆரவாரமாக கட்சியில் சேர்த்த பாஜக
கோவை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்பி ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதில் கோவை தெற்கு தொகுதியில் நோட்டோவை விட குறைவான வாக்கு வாங்கிய சேலஞ்சர் துரைசாமி என்பவரும் பாஜகவில் இணைந்துள்ளார்.
டெல்லியில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உட்பட 17 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸில் இருந்து ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவிலிருந்து ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதில் சிலர் 20 வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களாகவும் , சிலர் 30 வருடங்களுக்கு முன்பு எம்எல்ஏவாகவும் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் துரைசாமி, சின்னசாமி, தமிழழகன் ஆகிய 3 பேர் 2011ல் எம்எல்ஏவாக இருந்தவர்கள் ஆவர். இதேபோல் அருள், செல்வி முருகேசன், ரோகிணி ஆகிய 3 பேரும் 2001ல் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள்.
இவர்களை தவிர மற்ற அனைவரும் 1974 தொடங்கி 1994 வரைக்குமான காலகட்டங்களில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் ஆவர். இதேபோல் முன்னாள் எம்பியான குழந்தைவேலு 1980களில் எம்பியாக இருந்தவர். இதில் உள்ள ஒவ்வொரு எம்எல்ஏக்களின் வரலாறு குறித்தும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில பத்திரிக்கையாளர்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்..
அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் நோட்டோவை விட குறைவான வாக்கு வாங்கிய சேலஞ்சர் துரைசாமி பற்றிய பதிவினை வெளியிட்டுள்ளார்கள். கோவை தெற்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.. நடிகர் கமல்ஹாசன் அந்த தொகுதியில் 51481 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். கமலுக்கும் வானதிக்கு வாக்கு வித்தியாசம் 1728 ஆகும். 1728 வாக்குகள் அதிகம் பெற்று வானதி கோவை தெற்கில் வெற்றி பெற்றார். கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயகுமார் 42383 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் அப்துல் வாகப் 4300 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார்.
ஐந்தாவது இடத்தை நோட்டோ பிடித்தது. கோவை தெற்கு தொகுதியில் நோட்டோவிற்கு 901 வாக்குகள் கிடைத்தது. ஆறாவது இடத்தை பாஜகவில் தற்போது இணைந்துள்ள சேலஞ்சர் துரைசாமி பிடித்துள்ளார்.. இவர் அமமுக சார்பில் போட்டியிட்டு 701 வாக்குகள் மட்டுமே பெற்றார்.. நோட்டோவை விட குறைவான வாக்குகள் பெற்ற சேலஞ்சர் துரைசாமியை பாஜக இணைத்துள்ளதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இதே சேலஞ்சர் துரைசாமி 2011ல் கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications