உங்களுக்கு அக்கறை இருக்கா? கோபமாக கேட்ட முதல்வர்.. ஒரே வார்த்தையில் வானதியை ஆஃப் செய்த மா.சு!
கோயம்புத்தூர்: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் கோவையை புறக்கணிப்பதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வைத்த புகார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக கேஸ்கள் வேகமாக சரிய தொடங்கி உள்ளது. கோவையில் மட்டும் இன்னும் கேஸ்கள் குறையாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து கோவைக்கு சென்று அங்கு தடுப்பு பணிகளை கவனித்து வருகிறார்.
நேற்று கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்று கவனித்தார். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

கோவை
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் கோவையை புறக்கணிப்பதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புகார் வைத்து வருகிறார். வேக்சின் கொடுப்பதில் மக்களை புறக்கணிக்கிறார்கள். கோவைக்கு முன்னுரிமை கொடுப்பது இல்லை. கோவையை தமிழக அரசு கண்டுகொள்வது இல்லை என்று தமிழக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பதிலடி
இந்த நிலையில் கோவையில் நேற்று ஆய்வு நடத்திய முதல்வரிடம் வானதி சீனிவாசனின் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கோவையை புறக்கணிப்பதாக கூறியதும் லேசாக கோபப்பட்ட முதல்வர் ஸ்டாலின், எதுக்கு புறக்கணிக்கணும்? நாங்கள் ஏன் புறக்கணிக்கணும். சென்னைக்கு பிறகு கோவைக்குதான் அதிக வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. ஆட்சி ஏற்ற பின் கோவைக்கு இரண்டு முறை வந்துவிட்டேன்.

வாக்கு போட்டவர்கள்
எனக்கு வாக்களித்தவர்களுக்கு எப்படி வேலை பார்ப்பேனோ அதேபோல்தான் எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் வேலை பார்ப்பேன். ஐயோ இவருக்கு வாக்களிக்காமல் போய் விட்டோமே என்று மக்களே நினைக்கும் அளவிற்கும் உதவிகளை செய்வேன். இப்போது மட்டுமல்ல தேவைப்பட்டால் இன்னும் இரண்டு நாளில் மீண்டும் கூட கோவைக்கு வந்து பணிகளை கவனிப்பேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வானதி பதிலடி
வானதியின் இந்த கருத்துக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி கொடுத்தார். அதில், சென்னைக்கு பின் கோவைக்குத்தான் அதிக வேக்சின் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவையை கண்காணித்து வருகிறோம். கோவையை யாரும் புறக்கணிக்கவில்லை. 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில் 6.2 லட்சம் பேர் வரை வேக்சின் போடப்பட்டுள்ளது.

வேக்சின்
வேக்சின் வர வரதான் கொடுக்க முடியும். நாளை வேக்சின் கையிருப்பு தமிழகத்தில் தீர்ந்துவிடும். வானதிக்கு அக்கறை இருந்தால் வேக்சின் குறித்து மத்திய அரசிடம் கேட்கட்டும். மத்திய பாஜக அரசிடம் வேக்சின் வாங்கி கொடுக்க முடியுமா? சேப்பாக்கம் வேக்சின் உற்பத்தி மையத்தை தொடங்க முயற்சி செய்து வருகிறோம். அங்கு வேக்சின் உற்பத்தி செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம்.

கையிருப்பு
உங்களால் முடிந்தால் நீங்களும் எங்களுக்காக சேப்பாக்கம் வேக்சின் உற்பத்தி மையம் குறித்து மத்திய அரசிடம் பேசலாம். தமிழகத்தில் இருக்கும் வேக்சின் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்றும் நாளையும் வேக்சின் போட்டபின் கையிருப்பு தீர்ந்துவிடும். மத்திய அரசு இதற்காக உடனே வேக்சின் வழங்க வேண்டும், என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளிவிவரம்
தொடர்ந்து கோவை புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டு வந்தார். ஆனால் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வேக்சின் போடப்பட்டது கோவையில்தான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கி மா. சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். அதோடு வேண்டுமென்றால் கோவைக்கு மீண்டும் வருவேன் என்று கூறி முதல்வர் ஸ்டாலினும் வானதிக்கு பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications