இந்தவாட்டி மிஸ் ஆகாது.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பக்கா ஸ்கெட்ச்.. வெளியான அப்டேட்
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முன்னேறும் நகரமாக கோவை உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்கி பல பெரு நிறுவனங்கள் கோவையில் உள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் கோவையில் முதலீடு செய்து வருகிறார்கள். இதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு உள்கட்டமைப்பு முக்கியம்.
ஆனால் கோவை மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படவில்லை. சமீபத்தில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருந்தது. இந்நிலையில் கோவைக்கு மெட்ரோ ரயில் ஏன் அவசியம் என்பதற்கான வலுவான அம்சங்களை திட்ட அறிக்கையில் இணைத்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயர் பெற்ற கோவை கல்வி, உற்பத்தி தொழில், மருத்துவம், ஐடி ஆகியவற்றில் முக்கிய நகரமாக உள்ளது. நாட்டிலேயே வேகமாக முன்னேறி வரும் இரண்டாம் நிலை நகரங்களில் கோவை உள்ளது. ஆனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படவில்லை. கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் ண்ட காலமாக காத்திருப்பில் உள்ளது.
கோவை மெட்ரோ ரயில்
கோவை உள்ளிட்ட நாட்டின் 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவித்தது. அந்தப் பட்டியலில் கோவையை தவிர மற்ற அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. பட்டியலில் இல்லாத ஆக்ரா, போபால் நகரங்களிலும் மெட்ரோ செயல்படுத்தப்பட்டுவிட்டது.
கோவையில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக கானல் நீராகவே உள்ளது. அதிமுக ஆட்சியிலும் அந்த திட்டம் முன்னேற்றமடையவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை, மதுரை ஆகிய 2 நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை வருடத்திற்கு பிறகு கடந்த 2025 நவம்பர் மாதம் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
திட்ட அறிக்கை மேம்பாடு
இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மக்களும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாட்டை பாஜக புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்தது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்ட அறிக்கையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டது. கோவையின் மக்கள் தொகை, வளர்ச்சி விகிதம், மாஸ்டர் பிளானில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் திட்ட அறிக்கை மேம்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆறுதல்
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் கூறுகையில், "மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதலின் முதற்கட்டபணிகள் முடிந்துவிட்டன. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் ஏன் அவசியம் என்பதை இதில் விரிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளோம். விரைவில் இது மத்திய அரசுக்கு அனுப்பப்படும்" என்றனர். இது கோவை மக்களிடையே சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக வந்துள்ளது.












Click it and Unblock the Notifications