கோவை காந்திபுரம் டூ சிட்ரா செல்ல ஆட்டோவில் 300, பைக் டாக்ஸியில் 100.. தடை செய்ய கடும் எதிர்ப்பு
கோவை: பைக் டாக்ஸி வருகைக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் வாழ்வாதாரமே போய்விட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள். முன்பு 1000 சம்பாதிப்பது எளிதாக இருந்தது என்றும் இன்று ஆயிரம் ரூபாய் கூட ஓட்ட முடியாத நிலை உள்ளதாகவும் கூறுகிறார்கள். வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களோ கடும் எதிர்வினையாற்றுகிறார்கள். கோவையில் காந்திபுரத்தில் இருந்து சிட்ராவிற்கு செல்ல 300 ரூபாய் கேட்பார்கள்.. ஆனால் பைக் டாக்ஸியில் 100 ரூபாய் தான் என்கிறார்கள்.
நம்மூர்களில் ஆம்னி பேருந்துகள் ஒவ்வொரு ஸ்டாப்பாக ஆட்களை இறக்கி ஏற்றிசெல்வதற்கு சட்ட ரீதியாக எந்த வடிவமும் இன்று வரை கிடையாது. ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை சுற்றுலா பேருந்து மட்டுமே.. ஒரு இடத்தில் கூட்டாக ஆட்களை ஏற்றி, மொத்தமாக ஒரு இடத்தில் இறக்க முடியும். அவர்களிடம் கட்டணம் குறித்து அரசும் பெரிய அளவில் கேட்க இயலாது. அவர்கள் சொல்வது தான் கட்டணம் என்பதாகவே இருக்கிறது. சுற்றுலா பேருந்துகள் தான் பின்னாளில் ஆம்னி பேருந்துகளாக மாறின.

ஆம்னி பேருந்துகள் விதிகள் என்ன
இவை ஒப்பந்த வண்டிகள் என்று அழைக்கலாம். அதுபடி தான் செயல்பட வேண்டும். ஆனால் மக்கள் நலனுக்காக அரசு ஆம்னி பேருந்துகளை பல்வேறு இடங்களில் ஏற்றி இறக்குவதை கண்டு கொள்வது இல்லை.. அதேபோல் தான் கிட்டத்தட்ட பைக் டாக்ஸியும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பெரு நகரங்களில் பைக் டாக்ஸிக்கள் உள்ளன. இவற்றில் பயணிக்கும் தனிநபர்கள் ஆட்டோவை விட குறைவான கட்டணத்தில் போய் வர முடியும் என்பதால் இதற்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது.
ஆட்டோவில் பயணிப்பது இல்லை
ஒருவருக்கு மேல் என்றால் மட்டுமே ஆட்டோவை மக்கள் நாடுகிறார்கள். தனிநபராக வரும் யாரும் ஆட்டோவை நாடுவது இல்லை.. பைக் டாக்ஸியில் போகிறார்கள். இது ஆட்டோ ஓட்டுநர்களை கடுமையாக பாதிக்கிறது. ஏனெனில் முன்பு தனியாக வரும் பெண்கள், ஆண்கள் அவர்களின் வாகனத்தில் தான் ஏறி சென்று வந்தார்கள். இப்போது 3 பேர் அல்லது இரண்டு பேர் என்றால் மட்டுமே ஆட்டோவில் ஏறுகிறார்கள். அதேநேரம் ஓலா, உபேர்,ரெட் டாக்ஸி உள்ளிட்ட ஆப்களில் தான் முன்பதிவு செய்து ஆட்டோவில் அல்லது காரில் பயணிக்க விரும்புகிறார்கள்.
பைக் டாக்ஸிக்கு எதிர்ப்பு
எதில் கட்டணம் குறைவு என்பதை கவனித்தே பயணிக்கிறார்கள். முன்பெல்லாம் இப்படி இருக்காது. அதனால் ஆட்டோவில் தான் பயணிகள் பெரும்பாலும் ஏறுவார்கள். இதுவும் இப்போது அடியோடு நின்று விட்டது. தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு முழுக்கவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பைக் டாக்ஸிக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். அவ்வப்போது மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போதும் போராடி உள்ளார்கள். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
கோவை நெட்டிசன் பதிவு
இதுபற்றி கோவை நெட்டிசன் கூறுகையில், "இவங்க பண்ற அநியாயத்துக்கு ஆட்டோ சிஸ்டத்தையே ஒழிச்சாலும் பரவால்ல .. ஒருத்தரும் கூட நேர்மையா பார்த்தது இல்ல .. உதாரணமாக கோவை காந்திபுரத்தில் இருந்து சிட்ரா (விமான நிலையம்) போக சொளையாக 300 ரூபாய் கேட்ப்பாங்க .. ஆனா அதுவே ரேபிடோல 100 ரூபாய்க்குள்ள தான் வரும் .. இவங்க மீட்டர் போட்டு ஓட்டுனா யாரும் டாக்ஸி இல்ல பைக்ல போகனும்னு ஆசைப்பட மாட்டாங்க.
கேன்சல் ஆகாது
உடனே அரசு கொண்டு வரட்டும்னு சொல்லலாம் .. அரசு மீட்டர் கட்டணத்தை நெறிமுறைப்படுத்தனும்னு ஒரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் இதுவரைக்கும் போராட்டம் பண்ணியிருக்கா ?? உபேர் , ஓலா , ரேபிடோவை ஒழிக்கனுமாம் .. கோவையில் ரெட் டாக்ஸி அதிக கட்டணம் தான் .. ஆனா பேரம் பேச தேவையில்லை.. அப்புறம் கேன்சல் ஆகாது என்ற நம்பிக்கை தான் அதை நாடி போக காரணம் ..

நியாயமற்ற கோரிக்கை
பொது மக்களுக்காக தான் வாடகை ஆட்டோக்கள் .. அவர்கள் சம்பாதிக்க மக்கள் கஷ்டப்பட வேண்டும் என்ற ஒரு துளியளவும் தேவையில்லை .. இது ஒரு நியாயமற்ற கோரிக்கை ... மற்ற மாநிலங்களில் பெட்டர் கட்டணம் கட்டுபடியாகும்போது ஏன் தநா ஓட்டுநர்களுக்கு மட்டும் கட்டுபடியாவது இல்லை ? ... அரசு மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்பதே கோரிக்கை." இவ்வாறு கூறியுள்ளார்.
போராடும் ஆட்டோ ஓட்டுநர்கள்
அதேநேரம் நெட்டிசன் கூறியது போல் ஆட்டோ ஓட்டுநர்கள் அரசு மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடித்தான் வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தப்படவில்லை என்பதே எதார்த்தமான உண்மை..












Click it and Unblock the Notifications