நான்கு மடங்கு பெரிதாகும் கோவை விமான நிலையம்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றம்
கோவை: கோவை விமான நிலையம் தற்போது இருப்பதைவிட 4 மடங்கு பெரியதாக விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு முகப்பு தோற்றம் வேறு பகுதிக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் தெரிவித்தார்.
கோவை விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவாஸ் என்ற பெயரில் பயணியர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை காலை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுப்பது, மரம் நடுவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையம் குறித்து விழிப்புணர்வு அளிப்பது, ரத்ததானம், கண் பரிசோதனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றது. நாளை 27 விமானங்களுக்கு 3,000 பேர் வரை வருவார்கள். அவர்களுக்கு மாலை வரை வரவேற்பு அளிக்கப்படும்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்தைப் பொருத்தவரை 605 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட இருக்கிறது. இதற்கான நிலங்கள் அரசிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. நிலத்தை சர்வே செய்யும் பணி ஜனவரியில் இருந்து நடைபெற்று வருகின்றது. ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் இருப்பதால்
மாநில அரசுடன் இணைந்து அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றது. அது இறுதி கட்டத்தில் இருப்பதால் அது முடிந்தவுடன்தான் விமான நிலைய விரிவாக்க பணிகள் துவங்கும்.
விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்யபட்டுள்ள நிலையில், சுற்றுசுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் சுற்றுசுவர் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலைய ஓடுபாதை இப்போது 2,900 மீட்டர் இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பின்பு 3,800 மீட்டராக விமான நிலைய ஓடுபாதை அமையும். பெரிய விமானங்கள் வந்து செல்ல இது உதவும்.
கோவை விமான நிலையம் இப்போது இருக்கும் அளவை விட 4 மடங்கு அதிகமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது கோவை விமான நிலையம்
18,000 சதுர அடியாக இருக்கும் நிலையில், 4 மடங்கு அதிகமாக 75,000 சதுர அடியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது இருக்கும் விமான நிலைய கட்டடம் முழுமையாக அகற்றப்படும். விமான நிலையத்தின் முகப்பு தோற்றம் லீ மெரிடியன் ஹோட்டல் அருகே உள்ள அவினாசி சாலை பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications