புதருக்குள் பொண்ணு போனால் கெடுப்பீங்களா? பாதிக்கப்பட்ட கோவை மாணவியையே குற்றம் சாட்டறீங்க: பேரரசு
கோவை: கோவையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோவை கமிஷனர் தெரிவித்திருந்தார்.. மேலும், தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
கோவை சம்பவம் குறித்து இயக்குநர் பேரரசு கடுங்கோபத்துடன் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்.
மாணவி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய காதலனுடன் காரில் கோவை ஏர்போர்ட்டின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர், காரை அடித்து நொறுக்கிவிட்டு, காதலனை அரிவாளால் வெட்டி தாக்கியிருக்கிறார்கள்.. பிறகு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர்.
கோவை ஏர்போர்ட் மாணவி
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேரும் கோவை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்... இந்த 3 பேரையும் வருகிற 19ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை பரவ விட்டிருக்கும் இந்த சம்பவத்தில், பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் எழுந்து வருகின்றன..
11 மணிக்கு என்ன வேலை
குறிப்பாக, அந்த பெண்ணுக்கு அந்த நேரத்தில் அங்கு என்ன வேலை? என்று பாதிக்கப்பட்ட பெண்ணையே பலரும் குற்றம் சாட்டி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கூட, இதுதொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.. அதில், "முதலில், அந்தப் பெண் தவறு... இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க
நடந்த சம்பவம் குறித்து கோவை காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் தவறு என்று சிலர் சொல்கிறார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு கமிஷனர், "ஒருவர் தனிப்பட்ட விஷயங்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், எந்த தீர்ப்பும் பொதுமக்கள் வெளியிட வேண்டாம். பெண் செய்தது சரியா தவறா என்பதை யாரும் விசாரிக்க வேண்டாம். அது அவர்களின் சுதந்திரம், அவர்களின் இஷ்டம். VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது" என்று நச்சென கூறியிருந்தார்.
பெண் புதருக்குள் போனால் கெடுப்பீங்களா
இந்நிலையில், இதுகுறித்து பட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பேரரசு பேசும்போது, "பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்பது மிகப்பெரிய பொய்.
ஒரு பெண் தனியாக சென்றால் கெடுத்து விடுகிறார்கள். கோவை மாணவி வழக்கை பார்த்தால் மனம் பதறுகிறது. அந்த பெண் அந்த நேரத்தில் அங்கே போனாள்? என்று கேட்கிறார்கள். இரவு 11 மணிக்கு அந்த பொண்ணுக்கு அங்க என்ன வேலை? என்று கேட்கிறார்கள்.
உங்க பொண்ணுக்கு நடந்திருந்தா இப்படித்தா பேசுவீங்களா? அண்ணா பல்கலைக்கழகத்திலும் அந்த பெண் புதருக்குள் போனாள் என்று சொல்கிறார்கள்... அப்படி போனால் கெடுப்பீர்களா?" என்று கடுங்கோபத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் இயக்குநர் பேரரசு.












Click it and Unblock the Notifications