மரண பயத்தை காட்டிட்டான் பரமா.. எதிர்திசையில் பறந்த தனியார் பேருந்து.. பறிமுதல் செய்த போலீஸ்
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஒருவழிப் பாதையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகச் சென்று பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் பேருந்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் இருந்து கோவையை நோக்கிப் பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவுப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. அப்போது, தனியார் பேருந்தின் ஓட்டுநர் விதிகளை மீறி சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஒருவழிப் பாதையில் இடதுபுறமாக முந்திச் சென்றார்.

பயணிகளுக்கு அச்சுறுத்தல்
எதிர்திசையில் வாகனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், பேருந்து அதிவேகமாகச் சென்றது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதைக் கண்ட சக வாகன ஓட்டிகள், அதனைத் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பேருந்து ஓட்டுநர் மீது புகார்
போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி இப்படி விதிமீறலில் ஈடுபடலாமா என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஓட்டுநரே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறிய அந்தத் தனியார் பேருந்து மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து அங்கிருந்த ஓட்டுநர் ஒருவர் புகார் அளித்த நிலையில், அந்த ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து, பேருந்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காவல் துறை நடவடிக்கை
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடந்த 16.11.2026 அன்று காலை சுமார் 08.30 மணியளவில், திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த TN 78 L 5599 என்ற பதிவெண் கொண்ட தனியார் பேருந்து, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவு அருகே அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் இயக்கப்பட்டது. மேற்படி பேருந்தின் ஓட்டுநர் சக்திவேல் என்பவர், பேருந்தை திடீரென வலதுபுறமாகத் திருப்பி, கோவை-பல்லடம் சாலையில் போக்குவரத்திற்கு எதிர்திசையில் ஆபத்தான முறையில் இயக்கியதால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
போலீஸார் எச்சரிக்கை
இச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்து ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 872/2026 U/S 281 BNS r/w 184 of the Motor Vehicles Act ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படியான மேல் நடவடிக்கைகளுக்காகத் தற்போது சூலூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேருந்தின் இயக்க அனுமதி உரிமத்தை ரத்து செய்யக் கோரி, காவல்துறை சார்பில் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும். கவனக்குறைவாகவும், போக்குவரத்திற்கு எதிர்திசையிலும் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கிறது.


Click it and Unblock the Notifications
