கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பு
கோவை: தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளார். முன்னதாக 3 பேரும் குற்றவாளிகள் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி இரவு ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து 21 வயது கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு மது போதையில் வந்த மூன்று பேர், கார் கதவை திறக்க சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் திறக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கார் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்தனராம்.
அப்போது அந்த பெண்ணை தொட முயன்ற போது ஆண் நண்பர் தடுத்துள்ளார். அவரை அந்த 3 பேரும் கடுமையாக தாக்கிவிட்டனர். இதனால் அவர் மயங்கிவிட்டார். பின்னர் அந்த பெண்ணை மூவரும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனிடையே மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், அந்த பெண்ணை சற்று தூரம் தேடி பார்த்துவிட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது அங்கிருந்த சுவருக்கு பின்னால் இருந்த மாணவியை பத்திரமாக மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை வைத்து அந்த 3 பேரும் வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தேடி வந்தனர்.
அந்த 3 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பிளமேடு காவல் துறையினர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை பிடித்தனர்.
அப்போது அவர்கள் மூவரும் போலீஸார் தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விமான நிலையம் பின்புறம் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்கள், மரபணி பரிசோதனை முடிவுகள் உள்ளிட்டவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 112 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த மாதம் 2ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவி, அவரது ஆண் நண்பர், மாணவியின் தாய் உள்ளிட்டோரும் சாட்சி அளித்தனர்.
இந்த விசாரணை 21 நாட்களில் முடிந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேர் மதியம் 2.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார்.
பின்னர் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த வழக்கின் தீர்ப்பு, சம்பவம் நடந்த 3 மாதங்களில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications