வாய்மொழி உத்தரவை நம்பி.. அட்வான்ஸ் ஒர்க்! கோவையில் சிக்கும் ஒப்பந்ததாரர்கள்! போட்ட பணம் வரல!
கோயம்புத்தூர்: மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெற்று, அதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட கூடுதல் தொகையை செலவழித்து, 'அட்வான்ஸ் ஒர்க்' என்கிற பெயரில் எக்ஸ்ட்ரா கட்டுமான பணிகள் செய்யப்பட்டிருப்பது கோவை மாநகராட்சியில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் ஒப்பந்தங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டது என்றும், அதை பெற்ற ஒப்பந்ததாரர்கள் வேலையின் குவாலிட்டியை பற்றி கண்டுக்கொள்ளாமல், கமிஷன் கொடுத்து சரிகட்டி வந்ததாகவும் புகார்கள் எழுந்திருந்தன.

முதல்வர் கையில் பவர்
இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதலமைச்சர் விஜய் வசம் இருக்கிறது. எனவே இந்த துறையில் நடைபெற்ற முறைகேடுகள் கிளறப்பட்டு வருகின்றன. இப்படித்தான் கோவை மாநகராட்சியில் ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கோவையில் குளறுபடி
அதாவது கோவை 33வது வார்டு கவுண்டம்பாளையத்தில், ரூ.3.36 கோடி மதிப்பில் 'முதல்வர் படைப்பகம்' கட்டப்பட்டிருந்தது. மேலோட்டமாக பார்த்தால் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றுதான் தெரியும். ஆனால், கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபோது முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
அட்வான்ஸ் ஒர்க்
அதாவது, டெண்டர் விடும்போது ரூ.3.36 கோடிக்குதான் விடப்பட்டிருக்கிறது. அதற்கான பணிகளுடன் சேர்த்து கூடுதலாக ரூ.85 லட்சத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் ரூ.50 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகளும் நடைபெற்றிருக்கின்றன. இந்த பணிகளுக்கு டெண்டர் கோரப்படவில்லை. அட்வான்ஸ் ஒர்க் என்று இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சட்டப்படி தவறு.
வெள்ளம் ஏற்படுகிறது அல்லது தீ விபத்து நடந்திருக்கிறது என்கிற பேரிடர் காலங்களில் மட்டுமே அட்வான்ஸ் ஒர்க் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் சாதாரண காலத்தில் அட்வான்ஸ் ஒர்க் மூலம் முறைகேடு நடந்திருக்கிறது என்று பலரும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.
டெண்டரில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், வரும் 22ம் தேதி இந்த முதல்வர் படைப்பகத்தில் கூடுதல் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட இருக்கிறது. இந்த டெண்டரில் ஏற்கெனவே செய்யப்பட்ட பணிகளுக்கும் டெண்டர் கோரப்பட இருக்கிறது என்பதுதான். இதனால் ஒப்பந்ததாரர்கள் வசமாக சிக்கியிருக்கின்றனர்.
சிக்கும் அதிகாரிகள்
மாநகராட்சி உதவி பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர், தலைமை பொறியாளர் இவர்களின் ஒப்புதல் இல்லாமல், டெண்டர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாது. மீறி பணிகள் நடைபெற்றிருந்தால் அது சட்டவிரோதமாக கருதப்படும். எனவே இந்த பிரச்சனையில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
தற்போது இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்திருப்பதால், கோவை மாநகராட்சியில் இதுபோன்று அட்வான்ஸ் ஒர்க் என்கிற பெயரில் எத்தனை பணிகள் நடைபெற்றிருக்கின்றன? என்று ஆய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதில் அடுத்தடுத்து பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதிகாரிகளின் வாய் மொழி உத்தரவை நம்பி, கோடிக்கணக்கில் செலவு செய்து அட்வான்ஸ் ஒர்க் செய்த ஒப்பந்ததாரர்கள், தற்போது செலவழித்த பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications