கோவையில் ஓடும் ரயிலில் தங்க நகைகளை திருடிய தம்பதி.. சிறுவனால் சிக்கியது எப்படி?
கோவை: ஓடும் ரயிலில்களில் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சிலர் தம்பதியாக கூட அருகில் அமர்ந்திருப்பார்கள்.. ஆனால் அவர்கள் சட்டெனஅசந்தநேரமாக பார்த்து, நகை, பணம் மற்றும் பைகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடுவார்கள். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் கோவை அருகே ஓடும் ரயிலில் நடந்துள்ளது. இந்நிலையில் பயணியிடம் நகை திருடிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்வோர், அயர்ந்து தூங்குவார்கள். அப்படி தூங்கும் பயணிகளிடம் சிலர் நகை மற்றும் பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். சிலர் நல்லவர்கள் போல் நடித்து திருடுவதும் நடக்கிறது. கோவையில் ஓடும் ரயிலில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருநெல்வேலி மாவட்டம் மருதகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதாகும் இசக்கி என்பவர் அண்மையில்தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில் கோவைக்கு இரவில் வந்து கொண்டு இருந்தார். அந்த ரயில் கோவை போத்தனூர் அருகே வந்தது. அப்போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்துஇருந்த பேக்கை, ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அதை பார்த்த இசக்கி, சக பயணிகளின் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்துள்ளார்.. அப்போது அந்த சிறுவனுக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் இசக்கியிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே இசக்கி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், இசக்கியை தாக்கிவிட்டு சிறுவனுடன் இறங்கி தப்பி சென்றுவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த இசக்கி தங்களின் உடைமைகளை சோதனை செய்து பார்த்த போது பேக்கில் வைத்திருந்த 6 பவுன் தங்கநகைகளை காணவில்லை.
இதற்கிடையே ரயில்வே ஊழியர்கள் வந்து, ரயிலை நிறுத்தியது குறித்து இசக்கியிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அந்த ரெயில் 17 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக இசக்கி போத்தனூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது போத்தனூர் செட்டிப்பாளையம் பாரதிநகரை சேர்ந்த உஜாத்அலி (31), அவரது மனைவி சத்யா (25), அவர்களது உறவினரான 12 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. உடனே அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு போன தங்க நகைகளை மீட்டனர். ஓடும் ரயிலில் தங்க நகைகளை திருடிய தம்பதி சிக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications