அதிமுகவில் இணைந்த கோவை திமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் நந்தகோபால், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான திமுகவில் இணைய பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கோவையில் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.
கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதிக்கம் பிடிக்காததால் திமுக விவசாய அணி மாவட்ட நிர்வாகி அதிமுகவில் இணையும் முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கோவை மாவட்டம்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பரபரப்பான அரசியல் களமாக பார்க்கப்படுவது கோவை மாவட்டம் தான். நீயா நானா என்கிற வகையில் மாஜி மந்திரி எஸ்.பி.வேலுமணியும் சிட்டிங் மந்திரி செந்தில்பாலாஜியும் போட்டி போட்டு அரசியல் செய்து வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் கைப்பற்றி, கோவை அதிமுகவின் கோட்டை என்பதை எஸ்.பி.வேலுமணி நிரூபித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து சாதுர்யமான அரசியல் செய்ய செந்தில் பாலாஜி தான் சரியானவர் என்பதை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து அங்கு அனுப்பி வைத்தார். அவரும் முதல்வரின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் திமுக கொடியை பறக்கவிட்டார். அதிமுக தோல்வி அடைந்தாலும் கூட அக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விகிதம் ஓரளவு மரியாதையான எண்ணிக்கையில் இருந்தது.

விவசாய அணி
இந்நிலையில் திமுகவில் கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்த நந்தகோபால், சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவில் இருந்துவிட்டு ஆளுங்கட்சியாக உள்ள போது கட்சியை விட்டு விலகி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நந்த கோபால். எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான திமுகவில் இணைய பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கோவையில் அப்படியே தலைகீழான நிகழ்வு நடந்துள்ளது.
Recommended Video

என்ன காரணம்?
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் காரணமாக நந்தகோபால் கட்சி மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. நந்தகோபாலால் ஒரு நூறு ஓட்டுக் கூட வாங்க முடியாது என திமுகவினர் நினைக்கலாம், அவரால் திமுகவுக்கு என்ன பயன் எனத் தோன்றலாம், ஆனால் ஸ்டாலினை காட்டிலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவுக்கு விரும்பி சென்றிருக்கிறாரே, அதைத் தான் கூர்ந்து கவனிக்க வேண்டும். நந்தகோபாலை போல் இன்னும் பல அதிருப்தி உடன் பிறப்புகளுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு பாச வலை வீசத்தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications