கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை ஒருவர் வீடாக மாற்றி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர், ஏழை எளிய மக்களுக்கு பயன்பட கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒருவர் தனது வீடாக மாற்றி வைத்திருக்கும் நிலையை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனை பதிவிட்டுள்ள பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளனர்.
சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோவில், ஏழை மக்களுக்கு தடுப்பூசி போடும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பாருங்கள் என்று வீடியோ தொடங்குகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒரு இருசக்கர வாகனம் நிற்கிறது. வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து கட்டப்பட்ட கொடியில் துணிமணிகள் காயப்போடப்பட்டிருந்தன. உடனே சமூக ஆர்வலர் அந்த சுகாதார வளாகத்துக்குள் செல்கிறார்.

அங்கு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் துணிமணிகள் காயப்போடப்பட்டு உள்ளன. அதன் அருகே ஒருவர் நிற்கிறார். சமையல் அறை தயாரிக்கப்பட்டு பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஒரு அறையில் கட்டிலுடன் படுக்கை விரிப்பு உள்ளது. மற்றொரு அறையில் குழந்தைகளுக்கான சைக்கிள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. வேறொரு அறையில் மருத்துவ பொருட்கள் குவிந்து கிடந்தன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் அவரிடம் கேட்ட போது, தான் மருத்துவரிடம் அனுமதி பெற்று தான் தங்கி இருப்பதாக கூறுவதாக உள்ளது. அப்போது அவர்கள் அதிமுக எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட சுகாதார நிலையத்தை திமுக பிரமுகர் தனது வீடாக மாற்றி வைத்துள்ளதாக வீடியோவில் குற்றம் சாட்டுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, நகர்ப்புற சுகாதார வளாகத்தை வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷியாம்சுந்தர் தான் வீடாக பயன்படுத்தி வருகிறார். அவருடைய மனைவி கனிகா வேறு ஒரு சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ஏழை மக்களுக்கு பயன்படக்கூடிய நகர்ப்புற சுகாதார வளாகத்தை திமுக பிரமுகர் வீடாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
இதனிடையே பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறுகையில், "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர், தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி, திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாகத் திகழ்கின்றன. மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை மக்கள் இவற்றைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் துணிச்சல் ஒரு சாதாரண திமுக நிர்வாகிக்கு வருமானால், அவரது பின்னணியில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதே பொருள்.
தமிழகம் முழுவதும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அரசு மருத்துமனைகள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, அதனைக் கண்டுகொள்ளாமல், துணை முதலமைச்சர் திரு உதயநிதி பிறந்த நாளையே ஐந்து ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள், இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?
கடந்த 2011 ஆம் ஆண்டு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்று ஒரு புதிய துறையையே தொடங்கும் அளவுக்கு, மறைந்த திமுக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலமான 2006 - 2011 காலகட்டத்தில், திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுபட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். அவரது மகன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், இன்னும் ஒரு படி மேல் சென்று, அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் திமுகவினர் இறங்கியுள்ளனர்.
உடனடியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications