சின்னவருக்கு நன்றி.. கோவை மாநகராட்சியின் புதிய மேயராகும் ரங்கநாயகி குஷியோ குஷி!
கோவை: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரங்கநாயகி.
கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். திமுக கவுன்சிலர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததன் காரணமாகவும், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததன் காரணமாகவும் தலைமை அறிவுறுத்தலின் பேரில் ராஜினாமா செய்தார் மேயர் கல்பனா. இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் அடுத்த பெண் மேயர் யார் என்பது அனைவரின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோவை மேயர் பதவியை பிடிக்க திமுகவின் பெண் கவுன்சிலர்கள் பலர் முட்டி மோதினர். மண்டலக்குழு தலைவர்களாக இருக்கும் சிலரின் பெயரில் இந்த ரேஸில் முன்னணியில் இருந்தன.
இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கணபதி பகுதியைச் சேர்ந்த கோவை மாநகராட்சி 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி கோவை மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவே பெரும்பான்மை பெற்றிருப்பதால், நாளை கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம்.

திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரங்கநாயகிக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல் முறை கவுன்சிலர் ஆவார். இவர் கோவை எம்.பியும், முன்னாள் மேயருமான கணபதி ராஜ்குமாரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எளிய பொருளாதார பின்னணி கொண்டவர். தற்போதும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரங்கநாயகி. அப்போது பேசிய அவர், "மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சின்னவர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், மண்டல குழு தலைவர்களுக்கும், நிலைக்குழு தலைவர்களுக்கும், துணை மேயருக்கும், அனைத்து கவுன்சிலர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.
அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகியை முதல்வர் அறிவித்துள்ளார். நாளை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கும். கோவை மாநகராட்சிக்கு தேவையான நிதி அனைத்தும் வழங்கப்பட்டு, சாலைகள் போடப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் வெள்ளம் வராத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறோம். அடிப்படைத் தேவைகளை செய்திருக்கிறோம். இனியும் செய்வோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications