கோவையின் எதிர்காலம்.. மேஜர் ஏரியாவில் வருகிறது முக்கிய மாற்றம்.. எல்லாமே மொத்தமா மாறிடும் பாருங்க
கோவை: கோவை நகரில் ஏற்கனவே உக்கடத்தில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகள் இந்தாண்டு இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக இப்போது மற்றொரு மேஜர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இது கோவை நகரின் எதிர்காலத்தை வடிவமைப்பதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரம் என்றால் அது கோவை தான். அதேநேரம் சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ என பொது போக்குவரத்து பல இருந்தாலும் கோவைவாசிகள் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.

கோவை மேம்பாலங்கள்: இதனால் சாலைகளில் டிராபிக் நெரிசல் உச்சம் தொடுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே சென்றால் டிராபிக்கில் சிக்குவது உறுதி என்ற சூழலே இருக்கிறது. இதனால் கோவையில் முக்கிய இடங்களில் டிராபிக்கை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. உக்கடத்தில் மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், அவினாசி சாலையில் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
மிக முக்கிய பகுதி: அடுத்த கட்டமாக கோவையின் மற்றொரு முக்கியமான பகுதியான சரவணம்பட்டியில் டிராபிக் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத் துறை வகுத்துள்ள நிலையில், அது இப்போது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிக விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் மேம்பாலம் வந்தால் அது டிராபிக் நெரிசலைப் பெரியளவில் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "சரவணம்பட்டி பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான இடத்தை சிஎம்ஆர்எல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.. இத்திட்டத்திற்கான ஒப்புதலை அவர்கள் விரைவில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
சிஎம்ஆர்எல்: இந்த சந்திப்பில் மேம்பாலத்தை இப்போது நெடுஞ்சாலைத் துறை கட்ட உள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் இதே இடத்தில் மெட்ரோ ரயில் திட்டமும் வரவுள்ளது. இதன் காரணமாகவே சிஎம்ஆர்எல் நிறுவனத்துடன் ஆலோசித்து நெடுஞ்சாலைத் துறை மேம்பாலம் கட்டுவது குறித்து முடிவெடுக்கிறது.
பின்னணி: மேட்டுப்பாளையம் சாலையில் டிராபிக் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், சிங்காநல்லூர், சரவணம்பட்டி மற்றும் சாய்பாபா கோவில் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலையில் 71 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச் சாலையுடன் கூடிய மேம்பாலம் கட்டும் பணி சமீபத்தில் தொடங்கியது. மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள என்எஸ்ஆர் சாலை சந்திப்பு மற்றும் சிவானந்தா காலனி சாலை சந்திப்பு வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இந்த மேம்பாலம் இருக்கும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இதன் கட்டுமானம் இரண்டு ஆண்டுகளில் முழுமையடைந்து மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து சிங்காநல்லூர் மேம்பாலத்தைப் பொறுத்தவரை அதற்கான பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சரவணம்பட்டி சந்திப்பு மேம்பாலத்திற்கான பணிகள் சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்த உடன் தொடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
திட்டம் என்ன: கடந்த 2021ஆம் ஆண்டிலேயே சிங்காநல்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்களைக் கட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. மேலும், சரவணம்பட்டியில் சாலையை அகலப்படுத்தவும் திட்டமிட்டது. அங்கு இடத்தை பரிசோதித்த பின்னரே டிராபிக் நெரிசலைக் கருத்தில் கொண்டு சரவணம்பட்டியிலும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது..
இருப்பினும், அவினாசி சாலை டூ சத்தியமங்கலம் சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதால், சிஎம்ஆர்எல் ஆலோசனையைக் கேட்டு நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தை அமைகிறது.












Click it and Unblock the Notifications