திரிஷா விஜய் பெயரில் போலி புத்தகம்.. இதைகூட கவனிக்காத அதிகாரிகள்! அமைச்சர்கள் மிஸ் செய்தது எப்படி?
கோவை: கோவை மாநகரில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' திறப்பு விழாவுக்குப் பிறகு, புத்தகக் கொள்முதல் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' அண்மையில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆனால் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே, கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான நூல்கள் பல கோடி ரூபாய்க்கு முறைகேடாக வாங்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'திரிஷா விஜய்' போன்ற விநோத பெயர்கள்
நூலகத்தில் இடம்பெற்ற புத்தகங்களை வாசகர்கள் பார்த்தபோதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 'திரிஷா விஜய்', 'கண்ணன் விஜய்', 'விஜய் கோபால்', 'கார்த்திக் விஜய்' போன்ற கற்பனையான எழுத்தாளர் பெயர்களில் புத்தகங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. பிரபல நடிகை, அரசியல் தலைவர்களின் பெயர்களை ஒன்றுசேர்த்து, ஏஐ (AI) டூல்ஸ் மூலமாக அரைகுறையாகத் தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் அரசு கொள்முதல் தணிக்கையை எப்படிக் கடந்து உள்ளே வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது.
பகுத்தறிவையும் அறிவியல் சிந்தனையையும் வளர்க்க வேண்டிய தந்தை பெரியாரின் பெயரிலான நூலகத்தில், துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் சரிபார்க்காமல் இதுபோன்ற போலியான நூல்களைக் கண்மூடித்தனமாக வாங்கியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்திய உண்மை
பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்த நூலகத்தைப் பார்வையிட்ட பிறகு எழுதிய கட்டுரைதான் இந்த மெகா முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத 'அகல் விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' ஆகிய பதிப்பகங்கள் சார்பில் சுமார் 1,800 நூல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தையில் வெறும் 250 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும் 300 பக்க நூல்கள், இந்த நூலகத்திற்காக 1,200 முதல் 1,445 ரூபாய் வரை மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்தன. மேலும், சமண முனிவர்கள் எழுதிய 400 வெண்பாக்கள் கொண்ட 'நாலடியார்' நூலை ஒரு தனி நபர் எழுதிய தத்துவ நூல் என்று குறிப்பிட்டிருந்ததும், 1947ல் இல்லாத ஒருவரைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று அச்சிட்டிருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் மீது எழுந்த விமர்சனம்
நூலகத் திறப்புக்கு முன்னதாகவும், ஆய்வின்போதும் வருகை தந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அங்குள்ள புத்தகங்களின் தரம், ஆவணங்களின் உண்மைத்தன்மை ஆகியவற்றை முறையாக ஆய்வு செய்யாமல் போனது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுவதற்கு முன்பாக, ஆயத்தப் பணிகளைப் பார்வையிட அமைச்சர்கள் நேரில் சென்றனர். ஆனால், பிரம்மாண்டமான கட்டடம், உள் அலங்காரம் மற்றும் மேடை அமைப்புகளைப் பார்வையிட்டதோடு அவர்களின் ஆய்வு முடிந்துவிட்டது. அங்கு கொண்டுவந்து அடுக்கப்பட்ட லட்சக்கணக்கான புத்தகங்களின் தரம் என்ன, கொள்முதல் பட்டியல் முறையாக உள்ளதா, உண்மையான நூல்கள்தான் வாங்கப்பட்டுள்ளனவா என்பதை ஒருமுறை கூட அமைச்சர்கள் கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கவில்லை.
அதேவேளையில், தவெக அமைச்சர்கள் ஆட்சி நிர்வாகத்திற்குப் புதியவர்கள் என்பதைப் பயன்படுத்திக்கொண்ட அதிகாரிகள், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் செயல்பட்டுள்ளனர். பல அடுக்கு ஆய்வுக் குழுக்கள் இருந்தும், எந்தவொரு கீழ்மட்ட அல்லது உயர்மட்ட அதிகாரியும் புத்தகங்களைச் சரிபார்க்கும் அடிப்படை வேலையைக் கூடச் செய்யவில்லை. அமைச்சர்களும் அதிகாரிகளை நம்பி, துறை ரீதியாகக் கடுமையான கேள்விகள் எதையும் கேட்காமல் ஒப்புதல் அளித்ததால், போலிப் புத்தகங்கள் நூலகத்திற்குள் தடையின்றி நுழைந்தன.
அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கே போலி நூல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வர முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.
அதிகாரிகள் தங்களின் பணியை முறையாகச் செய்திருந்தாலோ, அல்லது அமைச்சர்கள் கள ஆய்வின்போது ஏதேனும் சில புத்தகங்களை நேரில் திறந்து பார்த்திருந்தாலோ, இவ்வளவு வெளிப்படையான முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் என்று வாசகர்கள் கொந்தளிக்கின்றனர். ஒரு எழுத்தாளர் வந்து பார்த்த பின்பே உண்மை தெரியும் அளவிற்குத்தான் நிலைமை இருக்கிறது.
தவெக - திமுக காரசார மோதல்
இந்தப் புகார்களைத் தொடர்ந்து ஆளும்கட்சியான தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "இது இந்தியாவின் முதல் ஏஐ முறைகேடு.. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிட்டி மூலமாகவே இந்தப் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன" என்று குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுகவினர், "நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வாங்கியிருந்தால் 'திரிஷா விஜய்' என்ற பெயரில் எதற்காகப் புத்தகம் வரப்போகிறது? ஆளும் தவெக அரசு தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க திமுக மீது பழிபோடுகிறது" என்று எதிர்வாதம் செய்கின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை
சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலி நூல்கள் உடனடியாக நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே முகவரியில் இயங்கி வந்த சந்தேகத்திற்குரிய பதிப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கடந்த சில மாதங்களாகத் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு வாங்கப்பட்ட லட்சக்கணக்கான நூல்களைத் தணிக்கை செய்யத் தனி விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் வரிப்பணத்தில் நடந்த இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
