ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலின்.. "சும்மா விடமாட்டேன்.. இது மோடி புளுகு".. முதல்வரையே மலைத்து பார்த்த கோவை
கோவை: "அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு என்பார்களே.. அது மாதிரிதான், இது மோடி புளுகு... அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கொங்குவை பொறுத்தவரை, அதிமுகவின் கோட்டை என்பார்கள்.. ஆனால், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக மண்ணைக்கவ்வியிருந்தது.. எனவே, விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேகம் காட்டி வருகிறார்.

கொங்கு கோட்டை: அதேபோல, பாஜகவுக்கு பெரும் செல்வாக்கு உள்ள மண் இந்த கொங்கு மண்டலமாகும்.. இந்த முறை கொங்குவை வென்றெடுப்பது என்ற முடிவில் களமிறங்கியிருக்கிறது.
திமுகவை பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி இல்லாதது, மிகப்பெரிய பலவீனமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. எனினும், கொங்குவில் பிரதான வெற்றியை பெறுவதில் திமுக முனைப்பு காட்டி வருகிறது. இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசும்போது, பொள்ளாச்சி சம்பவம் முதல் பாஜகவின் பிரச்சாரங்கள் வரை விமர்சித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
மனநிறைவு: "தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மனநிறைவோடு, உங்களை சந்திக்க வந்துள்ளேன். எம்பி தேர்தல் மட்டுமல்ல, வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும்சரி, எந்த தேர்தல் வந்தாலும்சரி, எல்லா தேர்தல்களிலும் திமுகவே வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
10 ஆண்டுகால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா? கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என சொல்லும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன். மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம். மறந்திட முடியுமா. பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள்.
திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி: பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதல்வர் பழனிசாமியைக் கேட்டபோது, "அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க" என்று சொன்னார். நான் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது சொன்னேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில் அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. அந்த வழக்கு சிபிஐ விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதுமட்டுமா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவம் நடந்தது இல்லையா.
அமைதி வழி: அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராடியவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்? தூத்துக்குடியில், 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது யாருடைய ஆட்சியில்?.
பாஜக தமிழகத்துக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை திமுக தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாங்கள் தடுக்கிறோமா? அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு என்பார்கள். அது மாதிரி, இது மோடி புளுகு... அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா?
எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தபோது, யார் தமிழகத்தின் முதல்வர்? மறைந்த ஜெயலலிதா இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே? உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா? இல்லையே. தமிழக மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே? உங்களை யாரும் தடுக்கவில்லையே.
ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழகம் மீது திரும்பி பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழக மக்கள் என்ன ஏமாளிகளா?
பூராவும் பொய்: பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பாஜகவின் உயிர்மூச்சு. இனி இந்த பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது.. மாநிலத்தைக் கெடுத்த அதிமுக, மாநிலத்தை கண்டு கொள்ளாத பாஜக. இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications