அஞ்சனாவை பிளேடால் குத்தி கிழித்த மர்ம நபர்.. சரமாரி தாக்குதலில் ஸ்டேஷன் மாஸ்டர் படுகாயம்.. பரபரப்பு
கோவை ரயில் நிலைய பெண் அதிகாரியை மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளான்
கோவை: ஸ்டேஷன் மாஸ்டர் அஞ்சனாவை, மர்ம நபர் ஏன் பிளேடால் குத்திவிட்டு தப்பியோடினார் என்று தெரியவில்லை. ஹாக்சா பிளேடினால் தாக்கப்பட்ட அஞ்சனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கேரளா மாநிலம் வாளையாறு பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா. இவர் கோவை எட்டிமடை ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு, ரயில் நிலைய தகவல் மையத்தில் இவர் பணியில் இருந்துள்ளார். அப்போது மணி 1.30 இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்போது ஒரு மர்ம நபர், கேரளாவுக்கு செல்லும் ரயில் எத்தனைக்கு மணிக்கு வரும் என்று மலையாளத்தில் கேட்டுக் கொண்டே அஞ்சனா அறைக்குள் நுழைந்தார்.
அதற்கு பதிலளிப்பதற்குள், அந்த மர்ம நபர், திடீரென மறைத்து வைத்திருந்த ஹாக்சா பிளேடினை எடுத்து, அஞ்சனாவை தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சனா, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு எந்த பதிலையும் சொல்லாத அந்த நபர், அஞ்சனாவை கை கால் கழுத்து என சரமாரியாக பிளேடால் கிழித்துவிட்டார்.
இதனால் அஞ்சனா அலறி துடிக்கவும், அங்கிருந்தோர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பிவிட்டார். இதையடுத்து காயமடைந்த அஞ்சனாவை மீட்டு, பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வந்த நபர் யார் என்று தெரியவில்லை.. கொள்ளை அடிக்கும் நோக்கிலும் வரவில்லை.. அஞ்சனா அவரை முன்பின் பார்த்தது இல்லை என்றும் தெரிவிக்கிறார். அதனால் ஸ்டேஷனில் சிசிடிவி காமிராவில் பதிந்துள்ள காட்சிகளை வைத்து அந்த நபரை தேடும் முயற்சியில் காக்கா சாவடிபோலீசார் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications