"அகதிகளை விட மோசம்".. 8 ஆண்டுகளாக தகர கொட்டகையில் வாழும் கோவை தூய்மை பணியாளர்கள்!
கோவை: கோவையின் கொங்கு தமிழுக்கு உலகம் கடந்து பெரிய வரவேற்பு உள்ளது. மரியாதை கொடுப்பதில் கோவை மக்களுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். கோவைக்கு வெளியில் தெரியாத மற்றொரு முகமுள்ளது. அது அதிகாரவர்க்கத்தின் கோர முகம். கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்களை கொட்டகையில் அடைத்து, அகதிகளை விட மோசமாக நடத்தும் அவலம் நிலவுகிறது.
தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சிக்கான விருதை கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் விஜய் இந்த விருதை வழங்கினார். நம்பர் 1 மாநகராட்சியில் வளர்ச்சி பணி நடக்கிறதோ இல்லையோ சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அதிலும் தூய்மை பணியாளர்களின் நிலை ரொம்பவும் மோசம். கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது இடங்களில் குப்பை தொட்டி வைக்கும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களின் கண்ணீர் கதை
குப்பைகளை வீடு வீடாக சேகரிப்பதற்கு தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கவில்லை. குப்பையை 4 வகையாக தரம் பிரித்து வழங்க உத்தரவிட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பற்றி எந்த அரசும் யோசிக்கவில்லை. திமுக, அதிமுகவின் அரை நூற்றாண்டு ஆட்சியில் தொடங்கி மாற்று அரசியலை கூறி ஆட்சியை பிடித்துள்ள தவெக வரை அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மேம்பாலம் கடந்தாண்டு திறக்கப்பட்டது. இந்த மேம்பால பணிக்காக உக்கடம் சிஎம்சி காலனியில் இருந்த தூய்மை பணியாளர் குடியிருப்பு இடிக்கப்பட்டது. அதில் சுமார் 2,500 தூய்மை பணியாளர் குடும்பங்கள் இருந்தன. அவர்களில் 2,000 பேருக்கு புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டது. அதில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என்பது தனிக்கதை. மீதம் 500 குடும்பங்களை அதே அடுக்குமாடி குடியிருப்பு எதிரில் தகரை கொட்டகையில் தங்க வைத்தனர்.
8 வருடங்களாக கொட்டகைக்குள்
அதில் 222 பேருக்கு பெரியகுளம் எதிரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கடந்தாண்டு வீடு வழங்கப்பட்து. மீதியுள்ள 270 குடும்பங்கள், இப்போதும் மாநகராட்சி வழங்கிய தகர கொட்டகையில் தான் வாழ்கிறார்கள். 18 மாதங்களில் வீடு வழங்குவோம் என்று வாக்குறுதியளித்து கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர். 8 வருடங்களை கடந்தும் அந்த மக்களுக்கு கொட்டகையில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை.
ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ சிட்டி என கோவையின் வளர்ச்சிக்கு ஏராளமான அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகிறது. மாநகரை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் எந்த அடையாளமும் பொருந்தாது. திமுக, அதிமுக, தவெக என அரசியல் கட்சி தலைவர்கள் ஒருமுறையாவது அந்த இடத்தை பார்வையிட வேண்டும். ஆனால் எந்த அரசியல் கட்சி தலைவர்களோ, அதிகாரிகளோ கடந்த 8 வருடங்களாக அங்கு கால் அடி எடுத்து வைத்ததில்லை.
தினம் தினம் வேதனை
அந்தப் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் மகேந்திரன் கூறுகையில், "நான் மூன்றாம் தலைமுறை தூய்மை பணியாளன். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு எங்களை வெளியேற்றினர். மேம்பால பணி முடிந்ததும் அதே இடத்தில் வீடு கட்டி தருகிறோம் என கூறினர். சொன்னதை செய்யவில்லை. மொத்த வீடு 10க்கு 10 அளவிலான ஒரே அறை மட்டும் தான். சமையல், தூக்கம், பாத்ரூம் எல்லாமே ஒரு அறையில் தான்.

அவசரத்துக்கு சிறுநீர் கூட வீட்டுக்குள் தான் கழிக்க வேண்டும். அருகிலேயே சாப்பிடுவோம். வேறு வழியில்லை. அந்த பாத்ரூமுக்கு கதவும் கூட இல்லை. துணி, அட்டை வைத்து மறைப்போம். வயதுக்கு வந்த பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள். இந்த பகுதியை சுற்றி புதர் மண்டியுள்ளது. இரவு நேரங்களில் போதை கும்பல் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எங்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
சுகாதார சீர்கேடு
மாநகரின் மொத்த செப்டிக் டேங்க் கழிவும் அருகில் தான் கொட்டப்படும். மீன் மார்கெட்டின் கழிவும் இங்கே தான் தேங்கும். அருகிலேயே குப்பை கிடங்கும் உள்ளது. குப்பைகளுக்கு நடுவே குப்பையாக எங்கள் வாழ்வு மாறிவிட்டது. மொத்தமாக 6 பொது கழிப்பறைகள் உள்ளன. அதையும் பராமரிப்பதில்லை. குடிநீர் சாக்கடை கலந்து வரும். சுகாதார சீர்கேட்டால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கும். உடல்நலம், மனம் நலம் பாதிப்பால் 300க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டனர்.
இது மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம். பலர் இந்த வீடே வேண்டாம் என வெளியில் வாடகைக்கு சென்றுவிட்டனர். சம்பளம் குறைவாக உள்ளவர்கள் வேறு வழியில்லாமல் இங்கேயே உள்ளோம். நாங்கள் அதிகாலை 5 மணிக்கு பணிக்கு செல்வோம். வண்டி இல்லாதவர்கள் இங்கிருந்து உக்கடத்திற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். ஒருமுறை சென்று வர ரூ.150 - 200 வரை தேவைப்படும். இங்கு செலவு தான் அதிகம். சாவதற்குள் நல்ல வீட்டிற்கு செல்ல வேண்டும்.
என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்
மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக தூய்மை பணியாளர்களை தொடர்ந்து மாநகரை விட்டு வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பில் எந்த வசதியும் இல்லை. இலங்கை தமிழர்கள், திபெத் அகதிகளுக்கு கூட நல்ல வீடு கட்டி கொடுக்கிறார்கள். மண்ணின் மைந்தர்களை தகர கொட்டகையில் அடைத்து வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள். தவெக ஆட்சியலாவது எங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், உக்கடத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர் மெத்தனமாக செயல்பட்டதால், புதிய ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமான பணி நடக்கிறது. ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிந்து வீடுகள் ஒப்படைக்கப்படும். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம்" என்றனர்.


Click it and Unblock the Notifications
