செம்மொழி பூங்காவில் திரண்ட கோவை மக்கள்.. கார் பார்க்கிங்காக மாறிய காந்திபுரம் மேம்பாலம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
கோவை: மழை காலம் வந்தால் சென்னை மக்கள் தங்கள் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்க கூடாது என்று கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவது வழக்கம். கோவையில் சமீபத்தில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் இன்றும் செம்மொழி பூங்காவிற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்தனர். பார்க்கிங் நிரம்பியதால் மக்கள் காந்திபுரம் மேம்பாலத்தில் தங்களின் கார்களை நிறுத்தி சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

கோவை செம்மொழி பூங்கா திறப்பு
அதன்படி கோவை மத்திய சிறை வளாகத்தில் சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தன் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன் என்று அவர் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் செம்மொழி பூங்கா பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த பூங்காவை பார்வையிட ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். பூங்கா திறக்கப்பட்ட முதல் ஞாயிற்று கிழமையான கடந்த 14 ஆம் தேதி ஏராளமான பொதுமக்கள் செம்மொழி பூங்காவை பார்வையிட குவிந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அன்று ஒரு நாள் மட்டும் 27,452 பேர் செம்மொழி பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர். டிக்கெட் எடுக்க கியூ ஆர் கோடும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கவுண்டரில் நிற்காமல் கியு ஆர் கோடை பயன்படுத்தியும் பொதுமக்கள் நுழைவு எடுத்து கொண்டு பூங்காவிற்குள் சென்று மகிழ்ச்சியாக பொழுது கழித்தனர்.
ஆனாலும் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குவிவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நிலவியது. முக்கியமாக காந்திபுரம் கோவையின் மையப் பகுதியில் உள்ளது. செம்மொழி பூங்காவிற்கான பார்க்கிங் நிரம்பிவிட்டதால், மக்கள் தங்களின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சென்றனர்.
காந்திபுரம் மேம்பாலத்தில் கார் பார்க்கிங்
இந்நிலையில் செம்மொழி பூங்காவில் இன்றும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடந்த வாரத்தை போல இன்றும் மக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் அதிகளவு சென்றார்கள். பார்க்கிங் நிரம்பியதால் மக்கள் தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் மக்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் தங்களின் கார்களை நிறுத்தி சென்றனர். இதனால் காந்திபுரம் மேம்பாலம், கீழ் பகுதி என இரண்டு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. அரசு அங்கு போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications