கோவை செம்மொழி பூங்கா.. நுழைவுக் கட்டணம் எவ்வளவு? பார்க்கிங் கட்டணம் உண்டா?
கோவை: கோவையில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கான நுழைவு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்பின் ஆட்சி மாற்றம் நடந்ததால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து 2023ஆம் ஆண்டு காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் ரூ.208.50 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

2 ஆண்டுகள் இதன் பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த செம்மொழி பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம், மணமகள் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம் என்று 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் திறந்தவெளி வளாகம், ஓய்வறை, உணவகம், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, 14 ஆயிரம் சதுர அடியில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், கடையேழு வள்ளல் சிலைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், பேட்டரி வாகன வசதி, 4.2 ஏக்கரில் பார்க்கிங் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா டிசம்பர் 1 முதல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செம்மொழி பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெரியர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழி பூங்காவிற்குள் கேமரா கொண்டு செல்ல கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீடியோ கேமராவுக்கு ரூ.50 கட்டணமாகும்.
குறும்பட படப்பிடிப்புக்கு ஒருநாளுக்கு ரூ.2 ஆயிரமும், சினிமா படப்பிடிப்புக்கு ஒருநாளுக்கு ரூ.25 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்பவர்களுக்கு ஒரு மாதம் ரூ.100ம், ஒரு ஆண்டுக்கு ரூ.1,000ம் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. இதுதொடர்பாக நாளை மறுநாள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் நடைமுறைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications