நள்ளிரவு 2 மணி.. கோவை பெண்ணிடம் நெருங்கிய உருவம்.. ஓடி வந்து காப்பாற்றிய நாய்.. சிசிடிவியில் இவரா?
கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார் அந்த "மைனர்".. கடைசியில் அங்கிருந்த தெருநாய் விரட்டி விரட்டி அந்த மைனரை கடித்து துரத்தியெடுத்துவிட்டது.. பெண்ணை அந்த நாய் காப்பாற்றிய காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. ஆனால், அந்த மைனர் யார் தெரியுமா?
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே உள்ளது அசோகபுரம்.. இங்கு பெட்டிக்கடை செயல்பட்டு வருகிறது.. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் அந்த பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் யாரோ நெருப்பு வைத்து விட்டார்கள்.

கோவை துடியலூர் நள்ளிரவில் கொடுமை
இதுகுறித்து கடை உரிமையாளர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்கள்.. பெட்டிக்கடைக்கு தீ வைத்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் கேமராவில் அந்த அதிர்ச்சி காட்சி பதிவாகியிருப்பதை போலீசார் கவனித்தனர்..
அந்த வீடியோவில், நள்ளிரவு சுமார் 2 மணியளவில், அசோகபுரம் பகுதியில், சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனியாக உட்கார்ந்திருக்கிறார்.. அந்த வழியாக ஒருவர் நடந்து வருகிறார். கொஞ்ச நேரம் அந்த பகுதியை சுற்றிலும் பார்த்துவிட்டு, தனியாக இருந்த பெண்ணை நோக்கி செல்கிறார்.
உன்னுடைய நாயா பாரு
அதற்குள் அந்த நபரின் பின்னாடியே தெருநாய் ஒன்று வருகிறது.. அப்போது அந்த பெண்ணிடம், "இது உன்னுடைய நாயா பாரு? பின்னாடியே வந்துட்டு இருக்கு?" என்று கேட்கிறார்.
உடனே அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், "கல் எடுத்து அடிங்க. நாய் ஓடிவிடும்.. இது கூட தெரியாதா" என்கிறார். அதை கேட்டு அந்த நபரும், கல்லை எடுத்து நாயை துரத்துகிறார். ஆனால் அந்த நாய்கள் சில அடி தூரம் போய்விட்டு மீண்டும் அந்த நபரையே பார்த்து குரைத்துக்கொண்டே நிற்கிறது.. .
பிறகு அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நெருங்கி, பாலியல் தொல்லை தர முயல்கிறார் அந்த நபர்.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு கூச்சலிடுகிறார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டதும், சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த அதே தெருநாய், மீண்டும் ஓடி வருகிறது. பெண்ணின் அருகிலிருந்த நபரை பார்த்து அந்த நாய் தொடர்ந்து சத்தமாக குரைக்கிறது.
கேமராவில் தெரிந்த அந்த "மைனர்"
அந்த நபர் பெண்ணை நோக்கி செல்ல முற்படும்போதெல்லாம், நாய் அவரை விடவேயில்லை.. கிட்ட நெருங்கி வந்து, அந்த நபரை கடிக்க பாய்ந்து தாக்குகிறது.. இதனால் பயந்துபோய், பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடிக்கிறார்.. ஆனால் அந்த நாய் அத்துடன் நிற்கவில்லை. அந்த நபர் எங்கேல்லாம் ஓடுகிறாரோ, பின்னாடியே நாயும் விடாமல் துரத்தி செல்கிறது.. இதுதான் அந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது.
பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் தெரு நாய் ஓடி வந்து அவரை காப்பாற்றிய இந்த காட்சி, இபபோது வெளியாகி சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
துடியலூர் போலீசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவியில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நபர், என்றும் ஆராய்ந்தனர்..
அப்போதுதான் மற்றொரு அதிர்ச்சி துடியலூர் போலீசாருக்கு காத்திருந்தது.. அதாவது அந்த நபர், துடியலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அதைவிட இன்னொரு அதிர்ச்சி, இந்த சம்பவத்தின்போது, அந்த 16 வயது சிறுவன் போதையில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பெட்டிக்கடைக்கு நெருப்பு வைத்தது யார் என்று விசாரிக்க போய், எதிர்பாராத விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாலியல் அத்துமீறல் முயற்சி அம்பலமாகி உள்ளது.. அதைவிட, அந்த ஆபத்தான நேரத்தில் மனிதர்கள் யாருமே அருகில் இல்லாமல், ஒரு தெருநாய் ஓடி வந்து அந்த பரிதாப பெண்ணை காப்பாற்றிய காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது...!!!


Click it and Unblock the Notifications
