பெண்களோ பெண்கள்.. காக்கி சட்டையில் ஒரு கல்யாணராமன்.. கோவை இளம் பெண் புகார்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே சில இடங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, கோவையில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து மேலும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ள போலீஸ் குறித்து கோவை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவர் தற்போது நீலகிரி மாவட்டம் எம்ரால்டு காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (வயது 26) என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருணமான ஒரு வருடத்திலேயே ஆறுமுகம் மீது, சந்தியா கைக்குழுந்தையுடன் கோவை டிஐஜி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

காதல் திருமணம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்தியா," கடந்த சில வருடங்களுக்கு முன்பு நஞ்சுண்டாபுரம் சோதனைச்சாவடி அருகே எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. அப்போது ஆறுமுகம் என்னை தூக்கிவிட்டு, பத்திரமாக வீட்டுக்கு சென்று தகவல் கொடுங்கள் என்று நம்பர் கொடுத்தார். நான் வீட்டிற்கு சென்றவுடன் பத்திரமாக வீடு வந்துவிட்டேன் என்று அவரிடம் கூறினேன். அப்போதிருந்து என்னிடம் மெசேஜ், கால் செய்து பேசி வந்தார்.
என்னை பிடித்திருப்பதாக கூறினார். எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசுங்கள். மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறினேன். அவரும் எங்கள் வீட்டில் பேசி கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு ஒரு கைக்குழுந்தை இருக்கிறது. திருமணம் ஆனதில் இருந்தே காயத்திரி என்ற பெண் என் கணவருக்கு அடிக்கடி கால் செய்து கொண்டே இருப்பார். அவருக்கும் ஏற்கனவே திருணமாகிவிட்டது.
பெண்களோ பெண்கள்
அவரை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சொல்லியும் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தனர். இதேபோல இன்னொரு பெண் எனக்கு அழைத்து, நீங்கள் யார். நானும் ஆறுமுகமும் காதலிக்கிறோம் என்று கூறி அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பினார். ஆறுமுகத்தின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் உரையாடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
சந்தேகமடைந்து விசாரித்ததில் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆறுமுகத்திற்கு திருமணமாகி 10, 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் விவாகரத்து கேட்டபோது அவர் என்னை மிரட்டினார். நான் போலீஸ்காரன் எதுவும் செய்ய முடியாது. அதை மீறி என்னைப்பற்றி புகாரளித்தால் அதிகபட்சம் கைது தான் செய்வார்கள். என் வேலைக்கு எந்த பிரச்சனையும் வராது. வெளியில் வந்து உங்கள் குடும்பத்தை விட மாட்டேன் என்று மிரட்டினார்.
விசாரணை
எனக்கு தெரிந்த உயரதிகாரிகளை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரிடம் இருந்து எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும். மேலும் ஆறுமுகத்தால் வேறு எந்த பெண்களும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ." என்றார். சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications