விஜய் முதல்வராக காரணமே நாங்கதான்.. இல்லனா அமித்ஷா கதையை முடித்திருப்பார்.. டென்ஷனான மாணிக்கம் தாகூர்
கோவை: தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கடிதம் கொடுக்கவில்லை என்றால், அமித்ஷா கதையை முடித்திருப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விஜய் முதல்வராகவும், தவெகவினர் அமைச்சராகவும் முதலில் கடிதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று கூறிய மாணிக்கம் தாகூர், தவெகவுக்கு எம்பிக்கள் இல்லாததால் இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ள தவெக, விஜய்யை அடுத்த பிரதமர் என்று பேசத் தொடங்கி இருக்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையிலேயே தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்று பேசி இருந்தார். தொடர்ந்து அமைச்சர் கில்லி சரத், ஏம், பிஎம் பார்க்காமல் உழைக்கும் இந்தியாவின் நாளைய பிரதமரே என்று பேசி இருந்தார்.

அதேபோல் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று பேசி வருகின்றனர். மறுபக்கம் தவெக தரப்பில் வடமாநிலங்களில் உள்ள சோசியல் மீடியா பிரபலங்களை வைத்து தவெக ஆட்சியின் சாதனை என்று பொய்யாக பல்வேறு ரீல்ஸ்கள் பதவியேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு ரீலுக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்து வருவதாகவும் பேசப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று தவெகவில் இருக்கும் யாருமே சொல்லாமல் கடந்து செல்கிறார்கள். ராகுல் காந்தி சென்னை வந்த போதும் கூட முதல்வர் விஜய் சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணியிலும் இணைய தவெக இதுவரை ஆர்வம் காட்டவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் டென்ஷனாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், தவெகவில் எம்பி உருவாகிவிட்டால், அப்போது அந்த கட்சியை இந்தியா கூட்டணியில் இணைத்து கொள்வோம். எம்பி இல்லாதவர்களை நாங்கள் கூட்டணிக்கு வாங்க வாங்க என்று சொல்லி கொண்டிருக்க முடியாது. எம்பி-க்கள் இருந்தால் மட்டுமே எம்பிக்கள் இருப்பதுதான் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் ராகுல் காந்தியை இதுவரை விஜய்யோ, தவெகவோ பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லையே என்ற கேள்விக்கு, தேர்தல் வரட்டும்.. 107 இடங்களில் தவெக வென்ற பின், முதலில் அழைத்து பேசியது ராகுல் காந்தி தான். முதல் ஆதரவு கடிதம் கொடுத்ததே காங்கிரஸ் கட்சிதான். அந்த உண்மை தவெகவில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
தவெக எம்எல்ஏ-க்கள் அமைச்சராவதற்காக ஆதரவு கடிதம் முதலில் கொடுத்தது காங்கிரஸ்.. இல்லையென்றால் அமித்ஷா கதையை முடித்திருப்பார். காங்கிரஸ் கட்சி கடிதம் கொடுக்கவில்லை என்றால், கட்சியை உடைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி இருப்பார்கள். இந்த நிலை எல்லோருக்கும் புரியும். தேர்தல் வரும் போது விஜய் பேசுவார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
