கோவையில் உயிரை பறித்த வேகத்தடை.. பொதுமக்கள், பள்ளி நிர்வாகங்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை
கோவை: கோவை கொடிசியா அருகில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை அறியாமல் பைக்கில் வந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனத்தினர், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக வேகத்தடை அமைக்க கூடாது என்று கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பொதுவாக வேகத்தடைகள் என்பது அந்த பகுதிகளில் விபத்து ஏற்படக்கூடாது,யாராவது வாகனத்தில் அடிப்பட்டு இறந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அமைக்கப்படுகிறது.ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால், அந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாகவே சில நேரங்களில் முடிகிறது.

இதேபோல் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்க தடுப்புகள் வைப்பார்கள். அப்படி வைக்கப்படும் தடுப்புகளால் பலரும் விபத்தில் சிக்கி உயிரிழப்பது உண்டு. பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்ளுக்கு தடுப்புகளும் ஒரு காரணமாக இருக்கிறது. வேகத்தடை இன்னொரு காரணமாக இருக்கிறது.
பகலில் வாகன நெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த தடுப்புகள் அல்லது வேகத்தடைகளால் நல்லது நடந்தாலும்,நள்ளிரவில் வருவோருக்கு அது சில நேரங்களில் எமனாகவே இருக்கிறது. அப்படித்தான் கோவையில் திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை ஒரு உயிரையே பறித்தது.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் சந்திரகாந்த், சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்து நடத்தி வந்திருக்கிறார். செப்டம்பர் 29ம்தேதி அன்று நள்ளிரவு 12 மணியளவில் கடையை மூடிவிட்டு, சந்திரகாந்த் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு போய் கொண்டிருந்தார்.
கோவை கொடிசியா பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வேகத்தடை திடீரென புதிதாக அமைக்கப்பட்டிருந்தது தெரியாமல் வழக்கம் போல் வேகமாக வந்த சந்திரகாந்த் வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்பட்டிருந்தால் அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு குறைவு தான் என்று கூறினார்கள்.
இதனிடையே விபத்து ஏற்பட்ட பின்னர் போலீசார் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகளை பெயின்ட் மூலம் அடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனிடையே பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனத்தினர், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக வேகத்தடை அமைக்க கூடாது என்று கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வ சுரபி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத் தடை அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைப்பதற்கு உரிய சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து, உரிய சாத்தியக் கூறுகள் இருப்பின் மாநகராட்சி நிர்வாகமே வேகத்தடையை அமைத்து தரும்.
எனவே பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனத்தினர், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக வேகத்தடை அமைக்க கூடாது. தனியார் எவரேனும் வேகத் தடை அமைத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications