ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி.. ரவுடிசம்! கோவை பைக் ஷோரூமில் புகுந்து வண்டிகளை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி
கோயம்புத்தூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கோயம்புத்தூர்நிர்வாகி ஒருவர், இருசக்கர வாகன ஷோரூமிற்குள் புகுந்து அங்கிருந்த புதிய வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது, அந்த ஷோரூமின் பெண் உரிமையாளர் சற்றும் அஞ்சாமல் தவெக நிர்வாகியைச் சரமாரியாகக் கேள்வி கேட்டு, தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

என்ன நடந்தது? பின்னணி என்ன?
கோவை மாவட்டத்தில் உள்ள கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில் 'ஏ.என்.எஸ் மோட்டார்ஸ்' (ANS Motors) என்ற பெயரில் இருசக்கர ஷோரூம், பழுது நீக்கும் மையம் இயங்கி வருகிறது. இந்த ஷோரூமின் உரிமையாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளராகவும், தொண்டராகவும் இருந்து வந்துள்ளார்.
இவருக்குத் தவெக-வின் கோவை நகரச் செயலாளர் பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கட்சியின் இளைஞரணியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, ஷோரூம் உரிமையாளரிடம் பிரகாஷ் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தையும் வாகனத்தையும் வாங்கிச் சென்ற பிரகாஷ், சொன்னபடி எந்தக் கட்சிப் பதவியையும் வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஏமாற்றமடைந்த ஷோரூம் உரிமையாளர், தான் கொடுத்த பணத்தையும் வண்டியையும் திருப்பிக் கேட்டு பிரகாஷிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாகப் பணம் மற்றும் அரசியல் ரீதியான மோதல் இருவருக்கும் இடையே நீடித்து வந்துள்ளது.
ஷோரூமில் நடந்த ரகளை
இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்காகத் தவெக நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் அவருடன் சிலர் கலிங்கநாயக்கன்பாளையத்தில் உள்ள ஏ.என்.எஸ் ஷோரூமிற்குச் சென்றுள்ளனர். அப்போது ஷோரூம் உரிமையாளர் கடையில் இல்லை.. அவரின் மனைவி மட்டுமே கடையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
உரிமையாளர் இல்லாத நிலையில், அங்கிருந்த அவரின் மனைவியிடம் பிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் பிரகாஷ், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து, ஷோரூமிற்குள் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய இருசக்கர வாகனங்களை எட்டி உதைத்தும், கைகளால் தள்ளிவிட்டும் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
சீறிப் பாய்ந்த பெண் உரிமையாளர் - வைரல் வீடியோவில் இருப்பது என்ன?
தனது கண்முன்னே கடையிலிருந்த வண்டிகள் கீழே தள்ளிவிடப்பட்டுச் சேதமடைவதைக் கண்ட ஷோரூமின் பெண் உரிமையாளர் கடும் ஆத்திரமடைந்தார். சற்றும் பயப்படாத அவர், உடனடியாகத் தனது செல்போனை எடுத்து பிரகாஷின் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கினார்.
அந்த வீடியோவில், ஷோரூமில் இருந்த சோபாவில் பிரகாஷ் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க, அவரிடம் அந்தப் பெண் உரிமையாளர் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்:
நீ என்ன பெரிய ரவுடியா? உன் திமிரு, தெனாவெட்டு எல்லாம் வெளியே வச்சுக்கோ. நீ TVK கட்சினா எல்லாரும் பயந்துடுவாங்களா? ஷோரூமுக்குள்ள வந்து நீ எதுக்கு வண்டியைத் தொடுற? ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்க நீ... பொம்பளை கிட்ட வந்து உன் வீரத்தைக் காட்டுறியா? முதல்ல ஷோரூமை விட்டு வெளியே போ! எனச் சரமாரியாகத் திட்டித் தீர்த்தார்.
மேலும், இவன் பொண்டாட்டி நகையை வச்சுத் தான் நாங்க வாழ்றோம்னு சொன்னவன். இவன் பெரிய திருட்டு நாய்; லஞ்சம் வாங்கியிருக்கான். நான் ஆதாரத்தோட நிரூபிப்பேன். இருங்க நான் மீடியாவை வரச் சொல்றேன்"* என அந்தப் பெண் ஆவேசமாகப் பேசும் காட்சிகளும், தரையில் தள்ளிவிடப்பட்டுக் கிடக்கும் புதிய இருசக்கர வாகனங்களின் காட்சிகளும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. பிரகாஷுடன் வந்த நபர்கள் அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த முயன்ற போதும், "நீங்க இவன் கூட எல்லாம் வராதீங்க, எல்லாரும் முதல்ல வெளியே போங்க" என அவர் துணிச்சலாக அவர்களை வெளியேற்றினார்.
பெரிய ரவுடியா நீ? TVK-னா பயந்துவிடுவார்களா ?"கோவை ஷோரூமில் புகுந்து வாகனங்களைத் தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகியைப் பெண் உரிமையாளர் வெளுத்து வாங்கும் வீடியோ வைரல்!இளைஞர் அணிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1 லட்சம் & பைக் வாங்கியதாகப் புகார்: தொண்டாமுத்தூர் அருகே பெரும் பரபரப்பு!மாற்றம்.🔥🔥🔥
— Dr.Aravind Raja (@AravindRajaOff) November 16, 2026
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் எழுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோவை மாவட்டம் காரமடை தவெக ஒன்றியச் செயலாளர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் மற்றும் சாதி வன்கொடுமைப் புகார் அளித்ததன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, தற்போது கோவை நகரச் செயலாளர் பிரகாஷ் கட்சிப் பதவிக்காகப் பணம் மற்றும் வண்டி வாங்கி ஏமாற்றியதோடு, ஷோரூமிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருப்பது தவெக தலைமைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்தும் கட்சித் தலைமை, இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனப் பொதுமக்களும் சமூக வலைத்தளவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
