கடன் மோசடி.. சொத்தையும் பினாமி பேரில் ஏலம் எடுத்த கோவை நகைக்கடை.. ரூ.34 கோடி சொத்துகளை முடக்கியது ED
கோவை: கோவையில் செயல்பட்டு வந்த லாவண்யா ஜுவல்ஸ் நகைக்கடை, வங்கியில் கடன் பெற்ற தொகையை மோசடியாக பயன்படுத்தியதோடு, வங்கி கடனை செலுத்தாமல் ஏமாற்றியது கண்டறியப்பட்ட நிலையில், லாவண்யா நகைக்கடை தொடர்புடைய சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் 65 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக கடந்த 2016ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. வங்கியில் கடனாக வாங்கிய பணத்தை தொழில் மேம்பாட்டிற்காக பயன்படுத்தாமல் சட்டவிரோத பண பரிமாற்றம் மேற்கொண்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், வங்கியில் தவறான நகை இருப்பு கணக்கு காட்டி, சட்டவிரோதமாக கடன் வாங்கியது தெரியவந்தது. மேலும் மோசடி செய்து வாங்கப்பட்ட கடனை தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்ததும், மற்ற விவகாரங்களில் வங்கியில் கடனாகப் பெற்ற தொகையை முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.
மேலும் நகைக்கடையில் உள்ள தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தியதோடு, பிட்காயின்களில் முதலீடு செய்ததும் தெரியவந்தது. கிரிப்டோ கணக்குகள் மூலமாக கிடைக்கப் பெற்ற பணத்தில் 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டை சென்னையில் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், லாவண்யா கோல்ட் ஜுவல்லர்ஸ் நிறுவனம் வங்கியில் கடனுக்காக அடமானமாக வைத்த சொத்துகளை, கடனை திரும்ப அடைக்காததால் வங்கிகள் ஆன்லைன் மூலமாக ஏலம் விட்ட நிலையில், லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களை பினாமி போல் பயன்படுத்தி, அடமானம் வைத்த சொத்துகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதன் மூலமாகவும் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் லாவண்யா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர் சேர்த்த 34.11 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் உள்ள நான்கு நிலங்கள் மற்றும் ஒரு வீட்டு மனை ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications