விஜய் படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன்... அவருக்கும் பாஜகவுக்கும் பகையில்லை -பொன்.ராதா
கோவை: நடிகர் விஜய்க்கும் தங்களுக்கும் எந்த பகையுமில்லை என்றும், அவர் நடித்த சில படங்களை தாம் ரசித்து பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். நடிகர் விஜயை தனிப்பட்ட முறையில் தாம் நேசிப்பதாகவும், உண்மை அப்படியிருக்க அவருடன் எப்படி பகையாக இருக்க முடியும் எனவும் வினவியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை வழக்கமான ஒன்று தான் என்றும், இதில் பாஜகவுக்கு துளியும் தொடர்பில்லை என அவர் விளக்கினார். கடந்த ஒரு வாரமாக விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டுக்கு பாஜக தான் காரணம் என செய்தி பரவி வரும் நிலையில் அவர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் விளக்கம் அளித்த அவர் இப்போது கோவையிலும் அது தொடர்பாகவே விளக்கம் கொடுத்துள்ளார். ஐடி ரெய்டுக்கு பாஜக தான் காரணம் என பரவும் செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டால், அது விஜய் ரசிகர்கள் மத்தியில் பாஜக மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு பற்றி பேசி வருகிறார். நெய்வேலி சுரங்க ஆலைக்குள் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பாதுகாக்கப்பட்ட இடத்தில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடக்கக்கூடாது என்பது தான் தங்கள் நிலைப்பாடு என கூறியுள்ளார்.
கருணாநிதியின் திறமைகள் இப்போது திமுகவில் உள்ள யாரிடமும் இல்லை என்றும், டயர் இல்லாத திமுக என்ற காரை பிரசாந்த் கிஷோர் ஓட்டுவதற்கு வந்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். தமிழகத்தில் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் கோவை வந்ததாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
