கோவையை அசர வைத்த இறையன்பு.. பள்ளி மாணவர்களை உருக வைத்த அந்த வார்த்தை.. அண்ணாந்து பார்த்த அன்னூர்
கோவை: "பள்ளி மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது, ஒரு கைத்திறனையும் கற்று கொள்ள வேண்டும்" என்று முன்னாள் தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான இறையன்பு அறிவுறுத்தியிருக்கிறார்.
35 வருட கால குடிமை பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், தமிழக மக்களின் அன்பில் என்றும் நிறைந்திருப்பவர் வெ.இறையன்பு. அயராத உழைப்பும், அபரிமிதமான செயல்பாடுகள், தீர்க்கமான திட்டமிடல், என அனைத்தையும் தன்னுடைய முழுநேர பணிகளில் கொட்டி தீர்த்தவர்.. தமிழகத்தின் தலைமை செயலாளர் என்ற மிக உயர்ந்த பொறுப்பை, மிகுந்த சவால்களுக்கிடையே திறன்பட செயலாற்றியவரும்கூட.

இறையன்பு: அதனால்தானோ என்னவோ, பதவிக்காலம் முடியும் தருவாயில், இவரை மிஸ் பண்ணவே, முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லையாம்.. தலைமைச் செயலாளர் பதவியில் இன்னும் சில மாதங்களுக்கு இறையன்புவை நீட்டிக்க வாய்ப்பு இருந்தபோதிலும், அதனை அவர் மறுத்துவிட்டாராம்.. எனவே, தமிழக அரசிலேயே முக்கிய பதவி ஒன்றில் அவரை அமர வைக்கும் முயற்சியும் கையில் எடுக்கப்பட்டது.
அந்தவகையில், தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு கிடைக்கும் என்றார்கள்.. ஆனால் அதனையும் அவர் மறுத்துவிட்டாராம்.. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு இறையன்புவின் அனுபவம் பயன்படும் என கூறப்பட்டபோதும், அதையும் மறுத்துவிட்டாராம்.. முதல்வருக்கு ஆலோசனை வழங்குவதற்காக "அரசின் ஆலோசகர்" என்ற பதவில் இறையன்புவை உட்கார வைக்கலாமா? என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
பதவி நீட்டிப்பு: ஆனால், தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்றும், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் எழுத்துப்பணியையே தொடர போவதாகவும் இறையன்பு முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அரசு பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், எழுத்துப்பணியில் மிகவும் பிஸியாகவே இருந்து வருகிறார் இறையன்பு.. தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் வழங்கி வருகிறார்.
மாணவர்கள்: அப்படித்தான், கோவை அன்னூரில் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது.. இதில் சிறப்பு விருந்தினராக இறையன்பு கலந்து கொண்டு, கட்டிடத்தையும் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
"சாமிகளுக்குள் சண்டையில்லை... மனிதர்களுக்குள் தான் சண்டை இருக்கிறது.. மனிதன் வாழும் வரை மாணவர்கள்தான்... வாழ்வின் கடைசி வரை மனிதர்கள் கற்றுக் கொண்டு தான் உள்ளனர்.. மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது, ஒரு கைத்திறணையும் கற்று கொள்ள வேண்டும். இதற்காக கைத்திறண் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படுகிறது.
மூட்டுவலி: கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும். தரையில் உட்கார்ந்து படித்தால் தான் மாணவர்களின் உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணமே தரையில் உட்காருவதை தவிர்ப்பதால் தான். இளைஞர்கள் வரை இந்த வலி வருகிறது...
ஒரு பள்ளியின் சிறப்பு கட்டிடங்களால் உயர்ந்தது இல்லை. அதன்மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தான் உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிக்கும் ஒருவர் ஒருபோதும் காலப்போக்கை கற்று கொள்ள முடியாது. பள்ளியின் பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படித்தால்தான் சிறந்த அறிவை பெற முடியும். மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.. விழிப்புடன் இருப்பவர்களே வெற்றியாளர்களாக மாறுவார்கள்.
புத்திசாலித்தனம்: இன்றைய சிறுவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் நிறைந்துள்ளதென்றால் அதற்கு காரணம், செல்போனில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததால்தான். ஆனால், அதனை நீங்கள் சரியான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக, செல்போனுக்கு அடிமையாகாமல் பள்ளி மாணவர்கள் பார்த்து கொள்ள வேண்டும்.
அன்றைய மாணவர்களுக்காக லைப்ரரி இருந்தது. அன்று மாணவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதற்கு யாரும் இல்லை. இன்று இந்த நிலைமை கிடையாது.. படிப்பின் மூலம் எந்தெந்த பணிகள் கிடைக்கும் என்று, சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதாசீனம்படுத்தாமல், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்பை கற்று கொடுக்க வேண்டும். அப்போது தான் சராசரி மாணவர்கள் தானாக படிக்க துவங்குவார்கள்..
சிறந்த இலக்கு: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை சொல்ல வேண்டும்.. அப்போது தான் அவர்களை மேன்மைப்படுத்த முடியும். போதை பொருட்களை பயன்படுத்துவரிடமிருந்து விலகி சென்றால், மாணவர்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்" என்றார் இறையன்பு.












Click it and Unblock the Notifications