ஜெயலலிதா டூ அம்பானி வரை.. பிரபலங்களின் ஃபேவரைட் அன்னபூர்ணா ஹோட்டல்
கோவை: கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசிய விவகாரமும், அதன் பின்னர் அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதா முதல் அம்பானி வரை அன்னபூர்ணா ஹோட்டலில் பிரபலங்களுக்குப் பிடித்த உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க...
கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து எழுப்பி கேள்விகள் தொடர்பான வீடியோ, அதேசமயம் அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ என தொடர்ந்து வைரலாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்னை, தற்போது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. வானதி ஹோட்டலுக்கு வருவார் ஜிலேபி சாப்பிடுவார், காபி சாப்பிடுவார், சண்டையும் போடுவார் என்று அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் சொன்னதும் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது ஶ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல். தொழில் போட்டி நிறைந்த கோவையில் கடந்த அரை நூற்றாண்டாக மூன்று தலைமுறையாக உணவுத் துறையில் கோலோச்சி வருகின்றனர். சாதாரண ஏழை மக்கள் முதல் உலகப் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவருக்கும் அன்னபூர்ணா உணவு ஃபேவரைட் என்று சொல்லலாம். இவர்களின் இட்லி, சாம்பார் வித் பில்டர் காஃபிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
எம்.ஜி.ஆர். காலம் முதலே கோவை மாவட்டத்துக்கு எந்தவொரு வி.ஐ.பி. வந்தாலும் அவர்கள் அன்னபூர்ணா உணவகத்தில் சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, வாஜ்பாய், அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த ஹோட்டலில் பலமுறை சாப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்கு வரும்போதெல்லாம் எப்போதும் அன்னபூர்ணா உணவகத்துக்கு வந்து வண்டியில் உணவை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு இங்கு ஃபேவரைட் பக்கோடாதான். அதேபோல, எடப்பாடிக்கும் அன்னபூர்ணாவின் ஆனியன் ரோஸ்ட், பூரி மிகவும் விருப்பமான உணவாக இருந்துள்ளது. அதேபோல, அம்பானி சகோதரர்கள் ஒருமுறை ஊட்டி வந்திருந்தபோதும் அன்னபூர்ணாவில் சாப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப் பிரபலங்களின் முதல் தேர்வாகவும் இந்த ஹோட்டல்தான் உள்ளது. காஜல் அகர்வால், தமன்னா, சூரி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் இந்த ஹோட்டலின் உணவுதான் ஸ்பெஷல். சிவக்குமார், சூர்யா, கார்திக் கோவைக்கு எப்போது வந்தாலும் பக்கோடா பில்டர் காபி சாப்பிடுவது வழக்கமாம்.
அன்னபூர்ணா இட்லி, சாம்பாருக்கென எப்படி தனி ரசிகர் பட்டாளமே உள்ளதோ, காலையில் எழுந்ததும் அன்னபூர்ணா காபியைத் தேடி வரும் ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகும். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவினில் இருந்துதான் இந்த உணவகத்துக்கு பால் வாங்குகிறார்கள். கோவை மாவட்டத்திலேயே பால் கிடைத்தாலும், இவர்களுக்கு ஏற்ற தரத்தில் சித்தோட்டில் பால் கிடைப்பதால், அங்கிருந்தே பால் வரவழைக்கப்படுகிறது. அன்னபூர்ணா இட்லி, சாம்பார், ஃபில்டர் காபிக்கென ரசிகர்கள் இருந்தாலும், அவர்களது மேங்கோ மில்க் ஷேக் எப்போதுமே நின்று அடித்தாடும்.
மேங்கோ மில்க் ஷேக்கை பொறுத்துவரை இந்த உணவகத்தில் அல்போன்ஸா மாம்பழங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனராம். விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதன் சுவை விலையை மறக்க வைத்துவிடும் என்று கூறுகின்றனர் மேங்கோ மில்க் ஷேக் விரும்பிகள். உணவின் சுவை, தரத்துக்காக மட்டுமல்லாமல் கோவை மக்களின் சென்டிமென்டான ஹோட்டலாகவும் அன்னபூர்ணா விளங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications