GDN படத்தில் சத்யராஜ் ஏற்ற கேரக்டர்.. ஜி.டி. நாயுடுவின் மறுபக்கத்தை சொல்லும் நட்பு கதை!
கோவை: ஜி.டி. நாயுடுவை சுற்றி பல்வேறு கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள GDN திரைப்படத்தில், சற்று அமைதியான அதேநேரம் மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சத்யராஜ். கோவையில் ஜி.டி. நாயுடு வாழ்ந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான நண்பராக இருந்த ஒருவரின் கதாபாத்திரத்தை அவர் ஏற்றுள்ளார்.
இது பிரம்மாண்டமான காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அல்ல. வரலாற்று புத்தகங்களில் பெரிதாக இடம்பெறாத, ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நட்பு மற்றும் விசுவாசத்தை மையமாக கொண்ட கதாபாத்திரம்.

ஜி.டி. நாயுடுவின் நட்பு வட்டம்
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, அதன் பின்னர் திரைக்கதையை உருவாக்கிய இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், இந்த நட்பை கதைக்குள் கொண்டு வந்த விதம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர், "அந்த காலகட்டத்தில் ஜி.டி. நாயுடுவின் நெருங்கிய வட்டத்தில் ராமசாமி நாயக்கர், எம்.ஆர். ராதா உள்ளிட்ட பலர் இருந்தனர். அவர்கள் உண்மையிலேயே அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அந்த நட்பை தான் திரைப்படம் வெளிப்படுத்துகிறது.
அந்த நட்பு படத்தில் இருக்கிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையே இருந்த அரசியல் தொடர்பான விஷயங்களை நாங்கள் திட்டமிட்டே படத்தில் சேர்க்கவில்லை. ஏனென்றால் இது அதை பற்றிய திரைப்படம் அல்ல. பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இருந்த மனிதரை பற்றிய திரைப்படம்" என்று தெரிவித்துள்ளார்.
சத்யராஜ்
பாட புத்தங்களில் உள்ள வரலாற்றுக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த மனிதருக்கும் இடையிலான வேறுபாட்டில் தான் சத்யராஜின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஜி.டி. நாயுடுவின் சாதனைகள், அவரது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் என அனைத்திலும் அவருக்கு அருகில் இருந்த ஒரு கதாபாத்திரமாக சத்யராஜ் தோன்றுகிறார். திரையில் அதிக கவனத்தை தன் பக்கம் ஈர்க்காமல், கதையின் உணர்வை தாங்கி செல்லும் வகையிலான கதாபாத்திரம் இது.

இந்த திரைப்படம் தனிப்பட்ட முறையில் தனக்கு முக்கியமானது என சத்யராஜ் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்தக் கதையுடன் எனக்கு இருந்த தொடர்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. இங்கேயே கோவையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில், இத்தனை ஆண்டுகளாகியும் ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்திற்கு செல்லாமல் இருந்தது எனக்கு உண்மையிலேயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவை. எடிசனுக்கு இணையாக அவரது கண்டுபிடிப்புகளும் கொண்டாடப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
வியந்த சத்யராஜ்
நடிகர் மாதவன் குறித்து பேசிய சத்யராஜ், "வயதான ஜி.டி. நாயுடுவாக அவரது இறுதிக்கட்ட தோற்றத்திற்காக செய்யப்பட்ட மேக்கப் என்னை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது" என்று மனம் விட்டு பாராட்டினார்.
தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் சத்யராஜ், அதிகாரமும், ஆளுமையும் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்தனை ஆண்டுக்கால அனுபவம் கொண்ட ஒரு நடிகரை உண்மையாக ஆச்சரியப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. அதை தான் இந்த படம் செய்து காட்டியுள்ளது.
கேரக்டர்
ஜி.டி. நாயுடுவின் கதை மற்றும் அவரை சுற்றி அந்த கதை உருவான விதம் ஆகிய இரண்டுமே சத்யராஜை ஈர்த்துள்ளன. இதுவே படக்குழு உருவாக்க முயன்ற திரைப்படம் எப்படிப்பட்டது என்பதையும் காட்டுகிறது. துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள்கூட, தாங்கள் எதிர்பார்த்ததைவிட ஆழமாக ஜி.டி. நாயுடுவின் உலகத்துக்குள் சென்றுள்ளனர்.
பலம் சேர்த்துள்ளது
சத்யராஜின் அனுபவம் GDN படத்திற்கு கூடுதல் வலிமையை அளிக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ, கலக்கல் வில்லன், கண் கலங்க வைக்கும் குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு வேடங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துள்ளவர் சத்யராஜ். அப்படிப்பட்ட நடிதரை ஜி.டி. நாயுடுவுக்கு நண்பராக நிறுத்தியிருப்பது படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை வழங்குகிறது. ஜி.டி. நாயுடுவின் சாதனைகளுக்கு பின்னணியில்.. அவர் நம்பிய மனிதர்கள் யார், அவரை நம்பிய மனிதர்கள் யார் என்பதை கூறும் கதையாகவும் இந்த படம் உருவாகிறது.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் தயாரித்துள்ள GDN திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் இன்று ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications
