கோவை மாநகருக்கு வந்தது குட்நியூஸ்.. பளபளன்னு மாறப்போகும் சாலைகள்.. எத்தனை கிமீ தெரியுமா?
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் பீளமேடு, காந்திமாநகர், காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் சூயஸ் குடிநீர் திட்ட குழாய் பணிகள் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இந்நிலையில் கோவையில் 613.07 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணி நடைபெற உள்ளதாக மாநகர ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக கோவை வளர்ந்துள்ளது. கோவையை பொறுத்தவரை ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. கோவையை பொறுத்தவரை சுலூர் தொடங்கி மருதமலை வரையிலும், பாலக்காடு சாலையில் மதுக்கரை வரையிலும் அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும் முற்றிலுமாக வளர்ந்துள்ளது.

இதுதவிர பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு வரையிலும் , மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை வரையிலும், சத்தி சாலையில் அன்னூர் வரையிலும் கோவை மாநகரம் வளர்ந்துவிட்டது. ஆனாலும் கோவை மாநகராட்சி பகுதிகளாக (வார்டுகளாக) கோவையின் மையப்பகுதிகளே உள்ளன. கோவை மாநகரம் விரிவாக்கம் செய்யப்பட்டால் மிகப்பெரிய நகரகங்களில் ஒன்றாக உருவெடுக்கும்.
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் இருக்கின்றன. ஏராளமான தெருக்கள், நகர்ப்புற பகுதிகள், இணைப்பு சாலைகள் என பல்வேறு பகுதிகளில் சாலைகள் நீண்ட சுற்றுவட்டத்திற்கு இருக்கிறது.
கோவை மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் குழாய், இன்டர்நெட் இணைப்பு, பாதாள சாக்கடை குழாய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாலைகள் அவ்வப்போது தோண்டப்படுகின்றன. அப்படித்தான் கோவை காந்திபுரம் , கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, காந்திமாநகர், உள்ளிட்ட இடங்களில் சூயஸ் குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு இருக்கின்றன.
இதன் காரணமாக கோவையின் மையப்பகுதிகளில் சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய சாலைகள் பல இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக கோவை மாநகர ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறும் போது, கோவை மாநகராட்சியில் கடந்த 2022-23 மற்றும் 2023-24 காலகட்டத்தில் புதிதாக சாலை அமைக்க 613.07 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 3,744 எண்ணிக்கையிலான சாலைகள் பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் 411.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2,407 எண்ணிக்கையிலான சாலைகளில் புதிய தார்ச்சாலை அமைத்து பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள சாலைகளில் விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications