18000 ரூபாய் தரும் தமிழக அரசு.. பெண்கள் விண்ணப்பிப்பது எப்படி? வெளியான முக்கிய அறிவிப்பு
கோவை: தாய்-சேய் அடையாள எண் பெற கர்ப்பிணிகள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அப்படி அடையாள எண் பெற்றவர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 18000 ரூபாயை தவணை முறையில் பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பை பார்ப்போம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் : ஏழை கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் பல வருடங்களாக செயல்படுத்தப்படுகிறது.. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை வழங்க வேண்டும். அவர்களின் பெயரை பதிவு செய்து,பிக்மி' எண் பெற்றவுடன் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, நான்காவது மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அத்துடன் கர்ப்பிணிகளுக்கு உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படுகிறது.
பின்னர் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி, தற்போத மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைக்கும் விதத்தில் கர்ப்பகால தொடர் கண்காணிப்பு செய்வதற்காக பிக்மி என்ற இணையதளத்தில் அனைத்து கர்ப்பிணிகளின் பெயரையும் பதிவு செய்கிறோம். இதற்காக 12 இலக்க தாய் -சேய் அடையாள எண் (ஆர்.சி.எச்.ஐ.டி.) வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு செய்கிறார்கள். சுய கர்ப்ப பதிவு மூலம் கர்ப்பிணிகள் தங்களது விவரங்களை https://picme.tn.gov.in/ picme public என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். ஆதார்அட்டை மற்றும் கர்ப்பத்தை உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து அடையாள எண் பெறலாம்.
மேலும் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு உதவி திட்டத்திற்கும் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த கர்ப்பிணிக்கு முதல் தவணையாக கர்ப்பகாலத்தின் 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரம், 2-ம் தவணையாக குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரம், 3-ம் தவணையாக குழந்தையின் 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் கர்ப்பகாலத்தில் 2 ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ.18 ஆயிரம் முதல் 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும். அந்த தொகை வங்கிசேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சுயகர்ப்ப பதிவு குறித்த வழிகாட்டுதல் நடைபெறும். இந்த சேவையை பயன்படுத்தி கர்ப்பிணிகள் பயன் பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications