ஒரு லிட்டர் தண்ணீர் 10,000 ரூபாய்.. அதென்னங்க ஹைட்ரஜன் வாட்டர்.. கொங்கு பகுதியில் என்ன நடக்கிறது?
கோவை: புதிதாக ஹைட்ரஜன் வாட்டர் பாட்டில் என்ற பெயரில் தண்ணீரை ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் விற்பதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீர் பாட்டில் விலை 10000 ரூபாய் என்கிறார்கள். இந்த தண்ணீர் பாட்டில் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தண்ணீர் பாட்டில்கள் விலை என்பது நம்ம ஊர்களில் 10 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை இருக்கிறது. அதிக பட்சமாக நம்ம ஊரில் விலை என்பது 600 ரூபாய் என்று கேள்விப்பட்டது உண்டு. அதுவும் கூட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வீராட் கோலி அருந்தும் குடிநீர் தான். இந்த குடிநீர் நிறுவனத்தின் பெயர் evian என்பது தான்.. இந்த குடிநீர் பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதியில் இருந்து நேரடியாக எடுத்து அதனை அப்படியே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்..

வீராட் கோலி குடிக்கும் இந்த தண்ணீரை பொறுத்தவரை மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பைகார்பனேட் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தாதுக்களும் காணப்படுகின்றது. இதனால் மிகவும் சாப்ட்டான மற்றும் சுத்தமான அருமையான சுவையில் தண்ணீர் இருக்குமாம்.. அதேநேரம் இந்தியாவில் உள்ள குடிநீரில் சில சத்துக்கள் மிஸ்ஸாகிவிடும் என்பார்கள். தண்ணீர் ஒரு லிட்டர் 600 ரூபாய்க்கு விற்க இறக்குமதி செய்வது மற்றும் அந்த நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூ போன்ற காரணங்களை குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் புதிதாக ஹைட்ரஜன் வாட்டர் பாட்டில் என்ற பெயரில் தண்ணீரை விற்கிறதாம். இந்த பாட்டில் விலை 10000 என்கிறார்கள்.. இந்த தண்ணீர் பாட்டில் மோசடியாக இருக்கலாம் என்று கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. கொங்கு பகுதியில் புதிதாக வந்த மோசடியா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அது எப்படி கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதிகளிலேயே மோசடிகள் அரங்கேறுகின்றன என்று சிலர் அந்த பதிவின் கீழ் கேட்டுள்ளார்கள்..
இந்நிலையில் குறிப்பிட்ட வீடியோவில், "என்னங்க சொல்றீங்க.. ஹைட்ரஜன் வாட்டாரா, வாட்டர் பாட்டில் விலை 10000 ரூபாயா? நம்ம டெய்லி குடிக்கிர தண்ணீரில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா? இது ஏன் இவ்வளவு விலை, தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை? ஹைட்ரஜன் வாட்டரை தினமும் குடித்தால் நமது உடலில் உள்ள மருத்துவ பிரச்சனைகள் எல்லாம் சரியாகும்" என்று கூறுகிறார்கள்..இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.

பொதுவாக தண்ணீர் என்பது என்ன? ஹைட்ரஜன் 2 மடங்கும் -ஆக்ஸிஜன் 1 மடங்கும் சேர்ந்ததே தண்ணீர் ஆகும், எனவேதான் H2o என்று அறிவியல் பெயர் அதற்கு. அப்படியிருக்கும்போது ஹைட்ரஜன் வாட்டர் என்று தனியாக ஒரு பெயர் எதற்கு. எல்லா நீரிலும் ஹைட்ரஜன் இருக்கிறதே என்ற கேள்விக் கணைகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
நிறமற்றும், நெடியற்றும், ஒளிபுகும் தன்மையுடனும் உள்ள வேதியல் சேர்மம் தான் தண்ணீர்.. உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் இருக்கிறது. தட்பவெப்ப அழுத்தத்தில் தண்ணீர் ஒரு நீர்மமாக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது.
நீர் இயற்கையில் திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று படிநிலைகளை கொண்டது.. 'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவரே நீர் குறித்து தெரிவித்திருப்பார். நீர் தான் இந்த உலகத்தையே சூழ்ந்துள்ளது. தண்ணீர் இல்லாமல் உலகில் உயிரினங்களால் வாழ முடியாது. இந்நிலையில் தண்ணீரில் சுவையை ஏற்படுத்தி அதனை விற்ற காலம் போய் தற்போது தண்ணீர் மருந்தாக விற்கப்படுவதான் சமூக வலைதளங்களில் பலரையும் திகைக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications