சீமானை விட 30% அதிகமா ஓட்டு வாங்குவேன்.. திமுகவை எதிர்க்க 'அவர்' வேணும்.. ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கோவை: சீமானை விட 10 சதவீதம் அல்ல 30 சதவீதம் அதிக வாக்குகள் வாங்கி காட்டுவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்கள் தான் இந்தியா கூட்டணியில் முன்னாடி இருக்கிறார்கள். டிஆர் பாலு உள்பட 14 பேர் இருக்காங்க. ஊழல் குற்றச்சாட்டுக்காக டி ஆர் பாலுவுக்கு மன்மோகன் சிங் ஆட்சியில் மந்திரி சபையில் இடம் கொடுக்கவில்லை. மக்களின் அன்பும் ஆதரவும் இருக்கிறது. இதனால் தேசிய ஜனநாய கூட்டணி 400 இடங்களில் உறுதியாக வெல்லும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தோனேசியா, பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகளில் இருக்கிறது. ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால் தேர்தல் செலவு குறையும். இந்தியாவின் வளர்ச்சி அதிகப்படும். அதிகாரிகளுக்கு சுமை குறையும். 6 மாதங்கள் அதிகாரிகள் தேர்தல் வேலையை பார்க்கின்றனர். லோக் சபா தேர்தலுக்கு 6 மாதம், சட்டசபை தேர்தலுக்கு 6 மாதம் என்றால், ஒரு ஆண்டு தேர்தல் வேலைக்காக அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர்.
5 ஆண்டுகளில் ஒரு ஆண்டு மட்டும் தேர்தல் வேலைக்காக அவர்கள் செயல்பட வேண்டியுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை தேவை உள்ளது. எதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்க்கிறார்கள்.. எதாவது புள்ளி விவரத்தோடு பேச வேண்டும். அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு கனிவாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. எப்படி அதிகமாக செலவாகும்?.. இரண்டு முறை தேர்தல் நடத்துகிறீர்கள்.. ஆறு, ஆறு மாதம் என இரண்டு முறை சம்பளம் கொடுக்கிறோம்..
ராணுவம், துணை ராணுவத்தை இரண்டு முறை பயன்படுத்துறோம். எப்படி செலவாகும். ஒரே நேரத்தில் இவிஎம் மிஷினில் இரண்டு பட்டனை அழுத்த வேண்டும்.. எம்பி யார், எம்எல்ஏ யார்.. தேர்தல் செலவு அப்படியே குறையும்.. எனவே அண்ணன் சீமான் அவர்கள் இதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக கவனிப்பார் என்று நம்பிக்கை இருக்கு.. ஒரு கட்சியை பிரித்து தான் பாஜக வளரவேண்டும் என்று கிடையாது..
1952ம் ஆண்டு முதன் முதலில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. அதன் பின்னர் 1957, 1962, 1967 ம் ஆண்டிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டில் தான் தேர்தல் நடந்தது. அப்போதும் இதே அரசியல் அமைப்பு சட்டம், இதே கூட்டாட்சி தத்துவம் தான். காங்கிரஸ் 105 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை டிஸ்மிஸ் செய்ததால் தான் இந்த குழப்பமே.. மாநிலத்தினுடைய தேர்தல் மாறியதால் தான் இப்படி மாறிவிட்டது.

இதனால் தான் ஏதும் தெரியாமல் பேசாதீர்கள். அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள்.. சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்தில் சீர்கெட்டுவிட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வளரும் பாஜக தொண்டர்களை குறிவைத்து கூலிப்படைகளை ஏவி கொலை செய்கிறது. காவல்துறையின் கையை கட்டி விட்டு ஆட்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சீமான் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "சீமானை விட 10 சதவீதம் அல்ல 30 சதவீதம் அதிக வாக்குகள் வாங்கி காட்டுவேன். கட்சி அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும், சீமான் அண்ணனின் கொள்கைகள், பேச்சுக்கள் தமிழகத்திற்கு வேனும். திமுகவை எதிர்க்க அவர் வேணும். திமுகவின் தவறுகளை தொடர்ந்து நாம் சுட்டிகாட்ட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications