கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி வரி குறைச்சாங்களா? நிர்மலா சீதாராமன் அறிவிச்சது இதுதான்!
கோயம்புத்தூர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில், கிரீம் பன்னுக்கு வரியை குறைத்தார்களா? என நெட்டிசன்கள் பரவலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் டெல்லியில் நேற்றும் இன்றும் நடந்தது. இதில் வரியை எளிமைப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து 5, 12, 18 மற்றும் 28 என நான்கு அடுக்காக இருக்கும் ஜிஎஸ்டி வரி இனி 5 மற்றும் 18 என இரண்டு அடுக்குகளாக தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அன்னபூர்ணா ஓட்டல்
எல்லாம் ஓகேதான், கிரீம் பன்னுக்கு வரி குறைந்திருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது கோவையில் கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் ஓட்டல் உரிமையாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். அதில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், ஜிஎஸ்டியில் இருக்கும் குளறுபடிகளை விளக்கினார். அதாவது, வெறும் பன்னுக்கு 5% என்று சொல்கிறீர்கள், ஆனால் அதில் வைக்கும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி என்று சொல்கிறீர்கள்? இத கணக்கு போடும் கம்ப்யூட்டரே குழம்புது என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், அடுத்த நாளே நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் பரவியது. உண்மையை சொன்னால் மன்னிப்பு கேட்க வைப்பீங்களா? என்று பலரும் கொந்தளித்தனர்.
கிரீம் பன்
இந்நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியில் மாற்றம் அறிவிக்கப்பட்டிருப்பதால், கிரீம் பன்னுக்கு வரி குறைக்கப்பட்டிருக்கிறதா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அறிவிக்கப்பட்ட மாற்றத்தின்படி கிரீம் பன்னுக்கு வரி 5% ஆக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
வேறு எந்த பொருட்களுக்கு வரி குறைவு?
அதேபோல பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. அதாவது, 12 சதவிகித ஜிஎஸ்டி பட்டியலில் இருக்கும் பால், வெண்ணெய், பிரட் உள்ளிட்ட 99 சதவிகித பொருட்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கார், பைக், ஏசி, டிவி, சிமெண்ட் என 28% ஜிஎஸ்டி பட்டியலில் உள்ள 99 சதவிகித பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் கணிசமான பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விலக்கு
இதில் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வரைபடங்கள், விளக்கப்படங்கள், உலக உருண்டைகள், பென்சில்கள், ஷார்ப்னர், க்ரேயன்கள், பேஸ்டல்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், குறிப்பேடுகள், ரப்பர்கள் போன்ற கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த பொருட்களுக்கு 5-12% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது.
சுகாதார துறையை பொருத்தவரை உயிர் காக்கும் 33 மருந்துகள், தனிநபருக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுக்கும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மறுபுறும் சில ஆடம்பர பொருட்களுக்கு வரி 40% ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ரூ.20-40 லட்சம் வரை உள்ள மின்சார கார்களுக்கான ஜிஎஸ்டி 5% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.40 லட்சத்திற்கும் மேல் உள்ள மின்சார கார்களுக்கு 40% வரை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கும் 40% வரி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications