அமைச்சர்கள் சொல்வாங்க! அதெல்லாம் விஜய்யை ஏற்க முடியாது! எதிர்ப்பு தெரிவித்த ஜோதிமணி
கோவை: முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார். விஜய்தான் அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோவை திவ்யோதயா அரங்கில் "நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் நடந்தது என்ன" என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றி கழகம் எந்த மாற்று நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை, எடுக்க மாட்டார்கள்.
543 உறுப்பினர்கள்தான் இருக்க வேண்டும் , இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார். இதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடம் இல்லை, தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
பாஜக எதிர்ப்பு என்பது ஓவ்வொருவருக்கும் ஒரு மாதிரி இருக்கிறது , தமிழக வெற்றி கழகம் புதிதாக வந்து இருக்கிறார்கள் , முன் அனுபவம் இன்றி வந்து இருக்கிறார்கள் , அவர்களுக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் என வரும் பொழுது அவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகளில் எந்த வித சமரசமும் செய்யவில்லை. பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்து தன்னிச்சையாக மத்திய அரசு செய்து கொள்கிறது. பூட்டான் அரசு உங்கள் பெட்ரோலை வாங்க முடியாது என சொல்லி இருக்கிறார்கள். கார் , பைக் வாங்கும் பொழுது என்ஜின் பழுதானால் என்ன செய்ய முடியும்? இந்த பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களை அழைத்து இது குறித்து கேட்டிருக்க வேண்டும். யாரையும் கேட்காமல் எத்தனால் கலந்த பெட்ரோலை மத்திய அரசு கொண்டு வருவது என்பது ஏற்க முடியாது. இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த குழப்பமும் இல்லை. மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார்
ராகுல் காந்தி, அவரால் மட்டும்தான் நரேந்திர மோடியை வீழ்த்த முடியும். சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான், யார் பிரதமர் என்பதை தேர்தலுக்கு மூன்று மாதமும் முன்பு முடிவு செய்வோம் என்று தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து செல்லும் உரிமை இருக்கிறது, என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்.
ராகுல்காந்தி மட்டும்தான் பிரதமராக முடியும். அவரை தவிர வேற யாராலும் மோடியை வீழ்த்த முடியாது. இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவருமே ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் செயல்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.
காக்ரோச் ஜனதா பார்ட்டி பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது, அவர்கள் போராட்டம் நகைச்சுவையாக, மிக எளிமையாக இருந்தது, போராட்டத்திற்கு பின் இருந்து என்ன செய்ய முடியுமோ அதை செய்தோம்.
திமுக இல்லாத இந்தியா கூட்டணி எந்த அளவிற்கு பலமாக இருக்கும் என்ற கேள்விக்கு தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி தமிழகம்,புதுவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியா கூட்டணியில் இருந்த பொழுது தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார்கள். இன்று அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக நினைக்கவில்லை.
திராவிட முன்னேற்ற கழகம் நிச்சயமாக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க மாட்டார்கள். அவர்கள் நீண்ட நெடிய அரசியல் பயணம் மேற்கொண்ட ஒரு கட்சி. பொறுப்பான முறையில் முடிவு எடுப்பார்கள் என நம்புகின்றேன்.
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என தமிழக முதல்வர் விஜய் சொல்வாரா என்ற கேள்விக்கு அவர்களுக்கு ஒரு நேரம் கொடுக்க வேண்டும் ,ஒரே நேரத்தில் எல்லா வேலைகளையும் அவர் செய்ய முடியாது. அதற்கு நேரம் வரும் பொழுது செல்வார்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகாலம் இருக்கிறது. ஒரு அனுபவம் இல்லாத அரசாங்கம், அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். விஜய், அரசையும் நடத்தணும், கூட்டணியையும் நடத்த வேண்டும், பிரதமர் வேட்பாளரையும் அறவிக்க வேண்டும் என சொல்ல முடியாது.
விஜய் பிரதமர் வேட்பாளர் என்றால் காங்கிரஸ் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு
"ராகுல் காந்தி மட்டுமே இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக இருப்பார், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை" என பதில் அளித்தார். சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கண்ணியத்துடனும் நாகரீகத்துடனும் பேச வேண்டும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, இதில் மாற்று கருத்து இருக்கிறது. சட்டமன்ற நாடாளுமன்ற, உறுப்பினர்கள் வசதியாக இருப்பதில்லை, சட்டமன்ற உறுப்பினர் அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டும்.
எரிபொருள் செலவு அதிகமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் அடிப்படையான சில விஷயங்கள் செய்து கொடுக்க வேண்டும். நாங்கள் கார் கேட்கவில்லை. எல்லாரும் கார் வைத்து இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஆனால் அமைச்சர் ராஜேஷ்குமாரோ, கார் கொடுத்தால் நாங்கல் வாங்கிக் கொள்வோம், அரசு முத்திரை பதித்த காரில் செல்வது பெருமைதானே என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
