கோவையை அடுத்த பாலக்காட்டிற்கு பட்ஜெட்டில் குட்நியூஸ்.. மொத்த கேரளாவும் எதிர்பார்த்த அறிவிப்பு
கோவை: கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தடத்திற்கு கேரள பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தடம் நடைமுறைக்கு வரும் போது, தமிழ்நாட்டின் கோவையை ஒட்டியுள்ள பாலக்காடு மிகப்பெரிய தொழில் நகரமாக உருவெடுக்கும் என்று கேரளா அரசு நம்புகிறது. அங்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்பதால் கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தடம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான கேரள மாநில பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் இன்று (பிப்ரவரி 7) சட்டசபையில் தாக்கல் செய்தார். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும்,. எந்தவொரு நலத்திட்டங்களோ அல்லது மேம்பாட்டுப் பணிகளோ பாதிக்கப்படாமல் கேரளா தப்பித்திருக்கிறது என்று அமைச்சர் பாலகோபால் கூறினார்.

வயநாடு பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக ரூ.750 கோடியில் திட்டம் ஒன்றை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்துள்ளார். கடுமையான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த நிதியமைச்சர், கேரளாவின் பொருளாதாரம் எழுச்சி பெறத் தயாராக உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். 10வது நிதி ஆணையக் காலத்தில் 3.88% ஆக இருந்த பிரிக்கக்கூடிய வரித் தொகுப்பில் கேரளாவின் பங்கை 15வது நிதி ஆணையக் காலத்தில் 1.92% ஆக மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும், தொடர்ந்து கேரளாவிற்கான நிதிகளை மத்திய அரசு குறைத்து வருவதாக நிதியமைச்சர் கே.என். பாலகோபால் குற்றம் சாட்டினார்.
கேரளாவில் மனித-வனவிலங்கு மோதல்களைத் தணிக்க திட்டமிடப்பட்ட சிறப்புத் தொகுப்புக்கு இந்த நிதியாண்டியல் ரூ.50 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கேரள காதி துறைக்கு 15.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள கைத்தறித் துறைக்கு ரூ.56.8 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பஸ்ரீ என்ற திட்டத்திற்கு ரூ.270 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமப்புற சிறு தொழில் திட்டங்களுக்கு ரூ.212 கோடி கேரள பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.. வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்காக ரூ.305.61 கோடியும், கோட்டூர் யானைகள் சரணாலயத்திற்கு இரண்டு கோடி ரூபாயும், பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களை ஒழிக்கும் பாம்பு விஷத்தால் உயிருக்கு ஆபத்து இல்லாத கேரளா திட்டத்திற்கு ரூ.25 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொச்சி நகர மேம்பாட்டிற்காக பெருநகர திட்டக் குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், திருவனந்தபுரம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கும் என்றும் கொச்சி மெட்ரோ இன்றும் சில வழித்தடங்களில் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். விழிஞ்சம் ஒரு பெரிய தொழில்துறை வழித்தடமாக மாற்றப்படும் என்றும் கேரளா முழுவதும் விரைவில் 150 பாலங்கள் கட்டப்படும் என்றும் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதேபோல் கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தடத்திற்கு கேரள பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும போது பாலக்காட்டில் உணவு பதப்படுத்துதல், மருந்து, பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற அதிநவீன தொழில்களுக்கான மையமாக மாறும் என்ற நம்பிக்கையில் அம்மாநில அரசு உள்ளது. ஏனெனில் தொழில் நகரமான கோவையை ஒட்டித்தான் பாலக்காடு இருக்கிறது.
கோவையைப் போல் பாலக்காடும் வளர்ச்சி பெற கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தடம் அவசியம் என்று அம்மாநில அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக பாலக்காட்டின் புதுச்சேரியில் உள்ள 105.26 ஏக்கர் நிலத்தை கேரள தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகத்திற்கு மாற்றுவதற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அரசால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு மொத்ததம் ₹1,789.92 கோடி 1710 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த மத்திய அரசின் குழு, கொச்சி-பெங்களூர் தொழில்துறை வழித்தடத்தின் பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பாராட்டி இருந்தது. இந்த திட்டம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பெரிய முதலீடுகளை ஈர்க்கும் என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை கேரளாவில் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திட்டம் கேரளாவின் தொழில் வளர்ச்சிக்கு புதிய திருப்பம் தரும் என்று அம்மாநில அரசு நம்புகிறது. கோவைக்கு பக்கத்தில் உள்ள பாலக்காடு இந்த திட்டத்தால் மிகப்பெரிய நன்மையடையும் என்பதால் கோவையிலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications